பிரியாணி பாத்திரத்தில் தங்கம் கடத்தல்; முதல்-மந்திரி குடும்பத்தினருக்கு தொடர்பு. சுவப்னா சுரேஷ் அதிர்ச்சி தகவல்

2016ல் முதல்-மந்திரி பினராயி விஜயன் துபாயில் சென்ற போது சிவசங்கர் என்னை முதன்முதலில் தொடர்பு கொண்டார்.
பிரியாணி பாத்திரத்தில் தங்கம் கடத்தல்; முதல்-மந்திரி குடும்பத்தினருக்கு தொடர்பு. சுவப்னா சுரேஷ் அதிர்ச்சி தகவல்
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக கடத்தப்படவிருந்த ரூ.14.82 கோடி மதிப்புள்ள தங்கத்தை, இரண்டாண்டுகளுக்கு முன்பு மத்திய சுங்கத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர், சரித்குமார், சுவப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் சமீபத்தில் சுவப்னா சுரேஷ் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதில், முதல்-மந்திரி பினராயி விஜயன், முன்னாள் முதன்மைச் செயலாளர் எம். சிவசங்கர்,மற்றும் இந்த வழக்கில் முதலமைச்சரின் மனைவி கமலா, மகள் வீணா, முதல்-மந்திரியின் முன்னாள் தனிச் செயலாளர் சி.எம்.ரவீந்திரன், முன்னாள் மந்திரி கே.டி.ஜலீல், நளினி நெட்டோ ஆகியோருக்கு தங்கல் கடத்தல் வழக்கில் தொடர்பு உள்ளதாகவும் அவர்கள் என்னென்ன செய்துள்ளனர் என்பது பற்றியும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து சுவப்னா சுரேஷ் கூறியதாவது:-

2016ல் முதல்-மந்திரி பினராயி விஜயன் துபாயில் சென்ற போது சிவசங்கர் என்னை முதன்முதலில் தொடர்பு கொண்டார். அப்போது நான் தூதரகத்தில் செயலாளராக இருந்தேன். முதல்-மந்திரி பை ஒன்றை மறந்து விட்டார். அதனை விரைவாக கொண்டு சென்று ஒப்படைக்குமாறும் சிவசங்கர் கேட்டுள்ளார். தூதரகத்தில் உள்ள முக்கிய அதிகாரி மூலம் அந்த பை ஒப்படைக்கப்பட்டது. அதில் பணம் இருந்தது. தூதரகத்தில் உள்ள ஸ்கேனிங் இயந்திரத்தில் பை ஸ்கேன் செய்யப்பட்டது. அது மூலம் அதில் இருந்தது பணம் என்பது தெரிய வந்தது. அதில் இருந்து தான் பல சம்பவங்களும் தொடங்கியது.

சிவசங்கரின் அறிவுறுத்தலின் பேரில் தூதரக அதிகாரியின் வீட்டில் இருந்து பாத்திரங்களில் பிரியாணி உணவுகள் கிளப் ஹவுஸுக்கு பலமுறை ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதில் பிரியாணி மட்டும் அல்ல மேலும், உலோகப் பொருட்களும் இருந்தன.

எனது வாக்குமூலத்தில் உண்மைக்கு புறம்பான எதுவும் கூறப்படவில்லை. யாரையும் தேவையின்றி இந்த விவகாரத்தில் தொடர்பு படுத்த எனக்கு எந்த திட்டவும் இல்லை. விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும். அவர்களின் அனைத்து ஈடுபாடு குறித்தும் நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும். நான் எங்கும் போகவில்லை, எல்லாவற்றையும் ஊடகங்கள் முன் எடுத்து சொல்லுவேன்.

ரகசிய வாக்குமூலம் பற்றிய கூடுதல் விவரங்களை வெளியிட முடியாது. நீதிமன்றத்தை மதிக்க வேண்டும். இந்த விவகாரம் பற்றிய மீதி உண்மைகளை நீங்களே விசாரித்து கொள்ளுங்கள்' என ஸ்வப்னா சுரேஷ் கூறி உள்ளார்.

ஸ்வப்னா சுரேஷ் இவ்வாறு கூறியிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com