திருச்சானூர் வசந்தோற்சவம்: தங்கத் தேரில் வலம் வந்த பத்மாவதி தாயார்

தங்கத் தேரில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்த தாயாரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Published on

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் நேற்று தொடங்கியது. அதையொட்டி நேற்று அதிகாலை சுப்ரபாதத்தில் பத்மாவதி தாயாரை எழுந்தருள செய்து, சகஸ்ர நாமார்ச்சனை செய்யப்பட்டது.

தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு உற்சவர் தாயாரை கோவிலில் இருந்து சுக்கரவாரத் தோட்டத்துக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டார். மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை உற்சவர் பத்மாவதி தாயாருக்கு மஞ்சள், குங்குமம், பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

மாலையில் அன்னமாச்சாரியார் திட்டம் சார்பில் ஆன்மிக இசை நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை கோவிலின் நான்கு மாட வீதிகளில் உற்சவர் பத்மாவதி தாயார் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவின் இரண்டாம் நாளான இன்று தங்கத் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் பிரார்த்தனையுடன் தாயார் எழுந்தருளச் செய்யப்பட்டு, சகஸ்ர நாமார்ச்சனை செய்யப்பட்டது. பின்னர், தாயார் தங்க ரத மண்டபத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். தாயார் தங்கத் தேரில் எழுந்தருளியதும் காலை 9.45 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தங்கத் தேரில் கம்பீரமாக அமர்ந்திருந்த தாயார், கோவிலின் நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

இன்று பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை சுக்கிரவார தோட்டத்தில் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இரவு 7:30 மணி முதல் 8:30 மணி வரை, கோவிலின் நான்கு மாட வீதிகளில் உற்சவர் பத்மாவதி தாயார் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com