

சண்டிகர்,
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பஞ்சாபின் புதிய முதல் மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பகவந்த் மான் கடந்த 16-ந்தேதி பகத் சிங் பிறந்த ஊரான கத்கர் கலன் கிராமத்தில் பதவியேற்றார்.
மேலும், பஞ்சாபில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மந்திரி பகவந்த் மான் உட்பட எம்.எல்.ஏக்கள் அனைவரும் நேற்று சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடைக்கால சபாநாயகர் இந்தர்பீர் சிங் நிஜ்ஜார் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்த நிலையில் பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவை நாளை பதவியேற்க உள்ளது. காலை 11 மணியளவில் மந்திரிகள் பதவியேற்றவுடன், பஞ்சாப் சிவில் செயலகத்தில் பொறுப்பேற்பார்கள். அதன் பின்னர் மதியம் 12.30 மணிக்கு ஆம் ஆத்மி தலைமையிலான பஞ்சாப் அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.