கண்களுக்கு கீழே வீக்கம்; விகார தோற்றம்... நடிகை ரன்யாவுக்கு நடந்தது என்ன? அதிர்ச்சி தகவல்


கண்களுக்கு கீழே வீக்கம்; விகார தோற்றம்... நடிகை ரன்யாவுக்கு நடந்தது என்ன? அதிர்ச்சி தகவல்
x

நடிகை ரன்யா ராவ் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படும்போது, அழுதபடி இருந்துள்ளார்.

பெங்களூரு,

கன்னடம், தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகை ரன்யா ராவ். துபாயிலிருந்து தங்கம் கடத்தி வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள அவர், தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார். அவரிடமிருந்து, 14.2 கிலோ தங்க கட்டிகள், மற்றும் ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் ரூ.2 கோடியே 67 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளான இவர், தங்க கட்டிகளை கடத்திய குற்றச்சாட்டுக்காக கடந்த திங்கட்கிழமை இரவில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் வருவாய் நுண்ணறிவு இயக்குநரக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில், குழுவாக இணைந்து தங்க கடத்தலில் சிலர் ஈடுபட்டு உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வி.ஐ.பி.க்களுக்கு விமான நிலையத்தில் அளிக்கப்படும் சலுகைகளை தவறாக பயன்படுத்தி, இந்த குழு தங்க கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளது என்றும் அதன் ஒரு பகுதியாகவே ரன்யா ராவ் செயல்பட்டு உள்ளார் என்றும் டி.ஆர்.ஐ. தெரிவிக்கின்றது.

இதில், நடிகைக்கு உடல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கான அறிகுறிகள் தென்படுகின்றன என அதிகாரிகளின் கவனத்திற்கு வந்துள்ளது. அவருடைய கண்களுக்கு கீழே வீக்கம் காணப்படுகிறது. முகமும் விகார தோற்றத்துடன் உள்ளது. ஆனால் இதுபற்றி அந்த நடிகை அதிகாரிகளிடம் கூறும்போது, துபாய்க்கு பயணம் செய்வதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பே இந்த காயங்கள் ஏற்பட்டன என கூறியுள்ளார்.

இதனால், அவருக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை செய்யும்படி சிறை அதிகாரிகளுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த சூழலில், உடலில் ஏற்பட்ட காயங்களை சுட்டிக்காட்டி, வழக்கறிஞர் முன்னிலையில் தொடர் விசாரணை நடத்த அனுமதி அளிக்கும்படி கோர்ட்டில் ரன்யாவின் வழக்கறிஞர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

விசாரணையை கேட்கும் தூரத்தில் இல்லையென்றாலும், காணக்கூடிய தூரத்திலாவது வழக்கறிஞருக்கு அனுமதி அளிக்கும்படி கேட்கப்பட்டது. ஆனால், இந்த வேண்டுகோளை கோர்ட்டு நிராகரித்தது. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும்போது, நீதிபதி முன் ரன்யா ராவ் அழுதபடி இருந்துள்ளார்.

விசாரணையின்போது அதிகாரிகளிடம், முடிந்த வரை இந்த வழக்கு விசாரணை விவரங்கள் ரகசியம் காக்கப்பட வேண்டும் என கேட்டு கொண்டார். சமீபத்தில், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், துபாய் மற்றும் சவுதி அரேபியாவுக்கும் சென்றிருக்கிறேன் என விசாரணையில் கூறியுள்ளார்.

ரன்யாவின் காயங்கள் பற்றி கர்நாடக மாநில மகளிர் ஆணைய தலைவர் நாகலட்சுமி சவுத்ரி கூறும்போது, இதுபற்றி முறையாக புகார் அளிக்காமல் நாங்கள் விசாரிக்க முடியாது. எதுவும் செய்ய முடியாது என குறிப்பிட்டார். எனினும், பெண் மீதோ அல்லது வேறு எவர் மீதோ தாக்குதல் நடத்துவதற்கு ஒருவருக்கும் உரிமையில்லை என கூறினார்.

ரன்யா ராவ் புகார் ஏதேனும் அளித்திருக்கிறார் என்றால், அதன் அடிப்படையில் ஆணையம் நடவடிக்கையில் ஈடுபடும். அதுவரை நான் எதுவும் கூற முடியாது என்று அவர் கூறியுள்ளார். கேரளாவில் சில ஆண்டுகளுக்கு முன் தங்க கடத்தல் வழக்கு பரபரப்பு ஏற்படுத்தியது.

ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் கடத்தி வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில், கர்நாடகாவில் அதுபோன்று மற்றுமொரு வழக்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story