

புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 5 பேருக்கு பன்றி காய்ச்சல் நோய் தாக்கி இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவை நேற்று நீதிபதிகள் சந்தித்து பேசினர். பன்றி காய்ச்சல் பரவலை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.
அதற்கு தலைமை நீதிபதி, வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் அனைவரும் பன்றி காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தனது கோர்ட்டு அறையில் வக்கீல்களிடம் இதை தெரிவித்தார். இதன்மூலம், 5 நீதிபதிகளை பன்றி காய்ச்சல் தாக் கிய செய்தி தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேசன் நிர்வாகிகளுடனும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே அவசர ஆலோசனை நடத்தினார்.
அடுத்தடுத்து நடந்த இந்த ஆலோசனை கூட்டங்களால், தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு காலை 10.30 மணிக்கு பதிலாக காலை 11.08 மணிக்குத்தான் கூடியது.
மத்திய சுகாதார அமைச்சகம், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று பணிக்கு வந்த 3 நீதிபதிகளுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும் 2 நீதிபதிகள் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவருகிறார்கள். அவர்கள் உடல்நலம் தேறி வருகிறது என தெரிவித்துள்ளது.