

புதுடெல்லி,
சுவிட்சர்லாந்து நாட்டின் பிரதமர் காய் பார்மலின் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். நடப்பாண்டில் இந்தியாவிற்கு அவர் மேற்கொள்ளும் 2-வது பயணம் இதுவாகும். முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் இந்தியா வந்திருந்தார்.
இன்று விமானம் மூலம் டெல்லி வந்திறங்கிய காய் பார்மலினுக்கு, அரசு முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ராஜ்காட் சென்ற காய் பார்மலின், மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து சுவிஸ் அதிபர் காய் பார்மலின், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையின்போது இருநாட்டு தலைவர்களும் இந்தியா-சுவிட்சர்லாந்து இடையிலான இருதரப்பு உறவுகளின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து விவாதிக்கவும், அதனை மேலும் முன்னெடுத்து செல்வதற்கான புதிய வாய்ப்புகளை ஆராயவும் உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சுவிஸ் அதிபரை சந்தித்து இருதரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு மத்திய மந்திரி ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியா-EFTA வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தின்(TEPA) அடிப்படையில், இருநாட்டு உறவுகளை ஆழப்படுத்த வேண்டும் என காய் பார்மலின் விரும்புவ்தாக தெரிவித்தார்.
சுமார் 16 ஆண்டுகால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவுக்கும், ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்திற்கும் (EFTA) இடையே 2024 மார்ச் மாதம் TEPA ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்தின் (EFTA) உறுப்பு நாடுகளான ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவை அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யத் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.