நடுக்கடலில் பழுதான சிரியா சரக்கு கப்பல் மூழ்கியது; கப்பலில் இருந்த எரிபொருள் கடலில் கலக்கிறதா? என கண்காணிப்பு

கடலில் மூழ்கிய சிரியா கப்பலில் இருந்த எரிபொருள் கடலில் கலக்கிறதா? என்று தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
Published on

மங்களூரு,

மலேசியாவில் இருந்து 8 ஆயிரம் டன் சரக்குகளுடன் 'எம்.வி.பிரின்ஸ்' என்ற சிரியாவை சேர்ந்த சரக்கு கப்பல் லெபனான் நாட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த கப்பலில் 8 ஆயிரம் டன் இரும்பு கொண்டுவரப்பட்டது. மேலும் கப்பலுக்கு தேவையான 220 டன் எரிபொருளும் கப்பலில் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. சிரியாவை சேர்ந்த 15 மாலுமிகள் அந்த சரக்கு கப்பலில் பயணித்து வந்தனர்.

அந்த கப்பல் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே அமைந்துள்ள புதிய மங்களூரு கப்பல் துறைமுகம் பகுதியில், அரபிக்கடலில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று கப்பல் பழுதானது. மேலும் கப்பலுக்குள் தண்ணீர் புகுந்தது.

இதையடுத்து கப்பல் மாலுமிகள், இதுபற்றி மங்களூரு புதிய துறைமுக அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினர். மேலும் புதிய மங்களூரு துறைமுகத்துக்குள் நுழைய அனுமதி கேட்டனர். ஆனால் புதிய மங்களூரு துறைமுகத்துக்குள் நுழைய அனுமதி வழங்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதனால் புதிய மங்களூரு கப்பல் துறைமுகத்தில் இருந்து ஒரு நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் அந்த சரக்கு கப்பல் சிறிது, சிறிதாக மூழ்க தொடங்கியது.

இதுபற்றி அறிந்த இந்திய கடலோர காவல் படையினர், 'விக்ரம்', 'அமர்த்தியா' ஆகிய 2 மீட்பு கப்பல்கள் மூலம் அரபிக்கடலுக்கு சென்று பாதிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 15 மாலுமிகளையும் பத்திரமாக மீட்டனர். மேலும் அந்த சரக்கு கப்பலில் இருந்து எரிபொருள் கசிந்து கடலில் கலக்கிறதா? என்பதை இந்திய கடலோர காவல் படையினர் கண்காணித்து வந்தனர். கடந்த 21-ந் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்களாக இந்த கண்காணிப்பு பணி நடந்து வந்தது.

மேலும் அந்த சரக்கு கப்பலையும் மீட்கும் முயற்சி தொடர்ந்து நடந்து வந்தது. கடலோர காவல் படைக்கு சொந்தமான விமானங்கள், கப்பல்கள் ஆகியவற்றை கொண்டு இந்த மீட்பு பணி நடந்தது. மேலும் அந்த கப்பலில் இருந்து எரிபொருள் கசிந்தால், அது பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வந்தன.

இதற்காக போர்ப்பந்தரில் இருந்து மாசுக்கட்டுப்பாட்டு கப்பலான ஐ.சி.ஜி.எஸ். சமுத்ரா பவக் கப்பலும் வரவழைக்கப்பட்டது. நேற்று காலையில் கடலோர காவல்படைக்கு சொந்தமான 9 கப்பல்கள், மாசுக்கட்டுப்பாட்டு கப்பல், 3 விமானங்கள் ஆகியவை அந்த கப்பலை மீட்கும் பணியில் ஈடுபட்டன. ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. பாதிப்புக்கு உள்ளான அந்த சரக்கு கப்பல் நேற்று வேகமாக மூழ்க தொடங்கியது.

நேற்று மதியம் 1.20 மணி அளவில் அந்த சரக்கு கப்பல் முழுமையாக மூழ்கியது. அந்த கப்பலில் ஏற்றப்பட்டு வந்த 8 ஆயிரம் டன் இரும்பு கம்பிகளும் கடலுக்குள் மூழ்கின. மீட்பு பணி தோல்வி அடைந்ததால் இந்த கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல்கள் திரும்பி சென்றன. இருப்பினும் மாசுக்கட்டுப்பாட்டு கப்பல் தொடர்ந்து அங்கு உள்ளது. சரக்கு கப்பல் கடலில் மூழ்கியதால் அதில் இருப்பு வைக்கப்பட்டு இருந்த 220 டன் எரிபொருள் கசிந்து கடலில் கலந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது. அதனால் கச்சா எண்ணெய் கசிந்து கடலில் கலக்கிறதா என்று தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com