

கவுரிபித்தனூர்
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபித்தனூரில் உள்ள மதுபான கடைகள், உணவகங்கள், கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இருப்பதாக தாசில்தார் மகேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தாசில்தார் மகேஷ் தலைமையில் நகரசபை கமிஷனர் கீதா, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கவுரிபித்தனூர் நகரில் உள்ள மதுபானக்கைடைகள், உணவகங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மதுபான கடைகள், உணவகங்கள், கடைகளில் இருந்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து கொண்டனர். மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதமும் விதித்தனர்.
இதுகுறித்து தாசில்தார் மகேஷ் கூறுகையில், மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் சிக்பள்ளாப்பூரை பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடுகள் இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த கடைகளில் மீண்டும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது தெரியவந்தால், அந்த கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.