

புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில், முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-
நிதி மந்திரி ஆற்றிய பட்ஜெட் உரை சுவையற்றதாக இருந்தது. இதற்கு முன்பு இப்படி ஒரு சுவையற்ற உரையை நான் கேட்டதாக தெரியவில்லை. முதலீட்டையோ, உள்நாட்டு சேமிப்பையோ ஊக்குவிக்க எந்த நடவடிக்கைகளும் அதில் சொல்லப்படவில்லை. பெரிய பொருளாதார புள்ளிவிவரங்கள் எதுவும் கூறப்படவில்லை.
இணைப்புகளையோ, இதர பட்ஜெட் ஆவணங்களையோ மக்கள் படித்துப் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு எண்ணிக்கை தேவை. ஆகவே, வருங்காலத்திலாவது இத்தகைய புள்ளிவிவரங்களை தெரிவிக்க வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தி இலக்கு, ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி உள்ளது.
பொருளாதாரம் தற்போது பலவீனமாக இருக்கிறது. அதை வலுப்படுத்த கட்டமைப்புரீதியான சீர்திருத்தங்கள் தேவை. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட ஏதேனும் ஒரு கட்டமைப்புரீதியான சீர்திருத்தத்தை சொல்ல முடியுமா?
பொருளாதாரத்தை வேகமான வளர்ச்சி பாதையில் கொண்டு செலுத்த வேண்டுமானால், துணிச்சலான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பிரதமர் அப்படி முடிவு எடுக்கக்கூடியவர் என்றுதான் நினைக்கிறேன். ஆயினும், இந்த அரசு துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்க தயங்குகிறது.
303 எம்.பி.க்களை பெற்றிருந்தும், இப்படி தயங்குவது ஏன் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் வியக்கிறார்கள். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலங்களில், காங்கிரசுக்கு ஒரு தடவை 140 எம்.பி.க்களும், இன்னொரு தடவை 206 எம்.பி.க்களும் மட்டுமே இருந்தனர்.
இருப்பினும், பொருளாதாரத்தை வலுப்படுத்த வலுவான நடவடிக்கைகளை எடுத்தோம். இதுபோன்ற பெரும்பான்மை எங்களுக்கு இருந்திருந்தால், இன்னும் வலிமையான முடிவுகளை எடுத்திருப்போம்.
2024-2025 ஆண்டுக்குள், ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்டிப்பிடிப்போம் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. மோடி அரசு தற்பெருமை பேசி வருகிறது.
நமது பொருளாதாரம், 1991-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஐந்தாண்டிலும் இரட்டிப்பாகி வருகிறது. தற்போது, ரூ.185 லட்சம் கோடி பொருளாதாரமாக இருக்கிறது. இன்னும் 5 ஆண்டுகளில், ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரம் ஆகிவிடும். இது ஒரு எளிமையான கணக்கு. இதை கணிக்க ஒரு பிரதமரோ, ஒரு நிதி மந்திரியோ தேவையில்லை.
கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.