என்னை வீட்டுக்கு கூட்டிட்டுப்போங்க..! தம்பதிக்கும், தத்தெடுத்த குழந்தைக்கும் இடையே நடந்த பாசப்போராட்டம்

ஐகோர்ட்டு உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஜக்தியால் மாவட்ட கலெக்டர் சத்யா கூறினார்.


என்னை வீட்டுக்கு கூட்டிட்டுப்போங்க..! தம்பதிக்கும், தத்தெடுத்த குழந்தைக்கும் இடையே நடந்த பாசப்போராட்டம்
Published on: 

ஜெக்தியால்

தெலுங்கானாவில் முறைப்படி தத்தெடுக்கவில்லை என கூறி தம்பதியிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தை, நீதிமன்ற உத்தரவை அடுத்து மீண்டும் அந்த தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

தெலுங்கானா மாநிலம், ஜெக்தியால் மாவட்டத்தில் கரீம்நகர் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த பகுதியை சேர்ந்த கசரப்பு ஸ்ரீனிவாஸ் மற்றும் சரிதா தம்பதியினருக்கு குழந்தை இல்லாததால், 3 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து 5 நாளேயான பச்சிளம் குழந்தை ஒன்றை இந்து முறைப்படி தத்தெடுத்தனர். அந்த ஆண் குழந்தைக்கு ருத்ரா மகேஷ் என பெயரிட்டு வளர்த்து வந்தனர். அந்த குழந்தைக்கு 3 வயது ஆகிறது.

காப்பகத்தில் சேர்ப்பு

இந்த நிலையில், குழந்தையை முறைப்படி தத்தெடுக்கவில்லை என கூறி, அதிகாரிகள் குழந்தையை பெற்றோரிடமிருந்து பிரித்துக்கொண்டு சென்று கரீம்நகரிலுள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர். காப்பகத்திற்கு சென்ற பெற்றோர் குழந்தையை சந்தித்துவிட்டு திரும்பும்போது, இருவரும் மிகுந்த மன வேதனையில் இருந்தனர்.

அவர்கள் விட்டு விட்டு செல்கின்றனர் என உணர்ந்த அந்த குழந்தை, என்னை வீட்டுக்கு 'கூட்டிட்டுப்போங்க' என அழுது அடம்பிடித்தது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பலரையும் உலுக்கியுள்ளது. பெற்றோரும் உணர்ச்சிவசப்பட்டனர்.

ஐகோர்ட்டு உத்தரவு

சமூக ஊடகத்தில் எழுந்த தொடர் எதிர்ப்பு, பொதுமக்களிடையே அதிகரித்த கண்டனம் ஆகியவற்றை தொடர்ந்து, ஐகோர்ட்டு உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெக்தியால் மாவட்ட கலெக்டர் சத்யா கூறினார்.

இந்த சூழலில், அவர்கள் தெலுங்கானா ஐகோர்ட்டை அணுகினர். இதனை தொடர்ந்து நடந்த விசாரணையில், குழந்தையை அந்த தம்பதியிடமே ஒப்படைக்கும்படி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து, தற்போது குழந்தையும், தம்பதியும் மகிழ்ச்சியாக உள்ளனர். இதனை பலரும் வரவேற்றும், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.

X