பெண்ணை வசியம் செய்து தாலி சங்கிலி கொள்ளை; மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு

புத்தூரில் பெண்ணை வசியம் செய்து தாலி சங்கிலியை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெண்ணை வசியம் செய்து தாலி சங்கிலி கொள்ளை; மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

மங்களூரு;

பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பூசாரியின் மனைவி

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா உப்பினங்கடி டவுனில் கோவில் பூசாரி ஒருவர் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை பூசாரியின் மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர், தன் வீட்டில் இறப்பு நடந்ததால் கோவிலுக்கு தன்னால் செல்ல முடியவில்லை. இதனால் தனது சார்பாக கோவிலில் ரூ.300 வழங்கும்படி பூசாரியின் மனைவியிடம் கொடுத்தார்.

இதனை நம்பிய அவரும், அந்த பணத்தை வாங்கினார். அந்த பெண்ணிடம் 100 ரூபாய் நோட்டு 3 கொடுத்தார். பின்னர் அதில் ஒரு நோட்டை உங்களது தாலி சங்கிலியில் வைத்து கொடுக்கும்படி அந்த நபர் கேட்டுள்ளார்.

தாலி சங்கிலி கொள்ளை

அப்போது எதற்காக தாலி சங்கிலியில் தொட்டு 100 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று அந்த பெண் கேட்டுள்ளார். அப்போது அந்த நபர், தான் தங்க நகைக்கடை வைக்க உள்ளதாகவும், ஜோதிடர் ஒருவர் கூறியப்படி சுமங்கலி பெண் ஒருவரின் தாலி சங்கிலியில் ரூபாய் நோட்டை வைத்து கொடுத்தால் நல்லது என்றார். இதனை நம்பிய அந்த பெண்ணும் 100 ரூபாய் நோட்டை தாலி சங்கிலியில் வைத்தார்.

அந்த சமயத்தில் மர்மநபர், பெண்ணை வசியம் செய்து அவரது கழுத்தில் இருக்கும் தாலி சங்கிலியை கழற்றி கொடுக்கும்படி செய்தார். பின்னர் அவர் அந்த தாலி சங்கிலியை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

மர்மநபருக்கு வலைவீச்சு

சிறிது நேரத்தில் சுயநினைவுக்கு வந்த அந்த பெண், மர்மநபர் தன்னை வசியம் செய்து தாலி சங்கிலியை கொள்ளையடித்து சென்றதை உணர்ந்தார். இதுகுறித்து அவர் தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து அவர்கள் உப்பினங்கடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com