திருமணம் குறித்து ராகுல்காந்தி தமாஷ்

தேஜஸ்வி தந்தையுடன் (லாலு பிரசாத் யாதவ்) பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்று ராகுல்காந்தி கூறினார்.
பாட்னா,
ராகுல் காந்தியுடன் செய்தியாளர்களை சந்தித்த தேஜஸ்வி யாதவிடம், காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சிகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்த லோக் ஜனசக்தி (பஸ்வான்) தலைவர் சிராக் பஸ்வான் முயற்சிக்கிறாரே? என செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த தேஜஸ்வி, ‘எனது மூத்த சகோதரனாக கருதும் சிராக் பஸ்வானுடன் பிரச்சினையை ஏற்படுத்த விரும்பவில்லை. அவருக்கு நான் சொல்வது ஒன்றுதான், உடனே திருமணம் செய்து கொள்ளுங்கள். இதுதான் சரியான நேரம்’ என்றார். இதைக்கேட்டதும் கூட்டத்தினர் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.
உடனே தேஜஸ்வியிடம் இருந்து மைக்கை வாங்கிக்கொண்ட ராகுல் காந்தி, ‘இந்த அறிவுரை எனக்கும் பொருந்தும். அவரது தந்தையுடன் (லாலு பிரசாத் யாதவ்) பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது’ என்றார்.
அப்போது எழுந்த சிரிப்பலை அடங்க நேரம் பிடித்தது. சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு பீகார் சென்றிருந்த ராகுல் காந்தியிடம், திருமணம் செய்து கொள்ளுமாறு லாலு பிரசாத் யாதவ் கூறியிருந்தார். இதை மறைமுகமாக சுட்டிக்காட்டும் வகையில் ராகுல் காந்தி இவ்வாறு நகைச்சுவையாக கூறியது குறிப்பிடத்தக்கது.






