எதிர்க்கட்சிகளின் கூட்டணியை அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை - சஞ்சய் ராவத் எம்.பி. தகவல்

தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை அமைப்பது குறித்து சில நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணியை அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை - சஞ்சய் ராவத் எம்.பி. தகவல்
Published on

மும்பை,

சிவசேனா மூத்த எம்.பி. சஞ்சய் ராவத் நேற்று முன் தினம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசினார். இந்தநிலையில் நேற்று அவர் தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் கூட்டணியை அமைப்பது குறித்து சில நாட்களில் பேச்சுவார்த்தை தொடங்கும் என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நாட்டில் வலுவான எதிர்க்கட்சிகள் கூட்டணி தேவைப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி இல்லாமல் கூட்டணி அமைக்க முடியாது. அந்த கட்சி கூட்டணியின் உயிராக இருக்கும். ஆலோசனைக்கு பிறகு தலைமை முடிவு செய்யப்படும். மராட்டியத்தில் 3 வெவ்வேறு சித்தாந்தங்களை கொண்ட கட்சிகள் இணைந்து மகாவிகாஸ் அகாடி கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக உத்தவ் தாக்கரே ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இது உறுதியான கூட்டணி. நன்றாக செயல்பட்டு வருகிறது. தமிழகம், அசாம், கேரள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி நன்றாக செயல்பட்டுள்ளது. ஆனால் மேற்கு வங்காளத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாதது நல்லதல்ல. அந்த கட்சி பலப்படுத்தப்பட வேண்டும். காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் அகில இந்திய கட்சி தான்.

இந்த விவகாரங்கள் குறித்து நான் சரத்பவாரிடம் பேசினேன். அவர் மும்பையில் இருக்கிறார். எதிர்க்கட்சிகள் கூட்டணியை அமைப்பது தொடர்பாக சில நாட்களில் பேச்சு வார்த்தை தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் மாநில அரசு கொரோனாவை சரியாக கையாளவில்லை என்ற தேவேந்திர பட்னாவிசின் குற்றச்சாட்டு குறித்து கேட்ட போது, மாநில அரசு நன்றாக செயல்பட்டு வருவதாக கூறி பிரதமர் மோடியே அவரது குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com