தமிழக சட்டசபை தேர்தல்; பிரசாரத்திற்காக சென்னை வந்த ராகுல் காந்திக்கு வரவேற்பு

இன்று ஒரே நாளில் பொன்னேரி, சோளிங்கர், துறையூர் ஆகிய 3 இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

தமிழக சட்டசபை தேர்தல்; பிரசாரத்திற்காக சென்னை வந்த ராகுல் காந்திக்கு வரவேற்பு
Published on

சென்னை

தமிழக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து, தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

இதில், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று காலை சென்னைக்கு விமானத்தில் வருகை தந்துள்ளார்.

அவரை, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பொறுப்பாளராக செயல்பட்டு வரும் கிரிஷ் சோடங்கர் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் வரவேற்றனர். இதனை தொடர்ந்து, அவர் ஹெலிகாப்டரில் பொன்னேரி செல்கிறார்.

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்கிறார். இதன் பின்பு, சோளிங்கர் தொகுதிக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். சோளிங்கர் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு விட்டு, சென்னையில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் அவர், பின்னர் ஹெலிகாப்டரில் துறையூர் செல்கிறார்.

திருச்சி மாவட்டத்தில் துறையூர் நகரில் இன்று மாலை 4 மணியளவில் நடைபெறும் கூட்டமொன்றில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். அவர் இன்று ஒரே நாளில் பொன்னேரி, சோளிங்கர், துறையூர் ஆகிய 3 இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com