

புதுடெல்லி,
தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதியை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் நாள் 'தமிழ்நாடு நாள்' கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த சிறப்பான தமிழ்நாடு தினத்தில் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
தொழில்முனைவோடு கடின உழைப்பும் மிக்கவர்களாய் விளங்கும் தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். உற்பத்தித் துறை முதல் வாகனங்கள் மற்றும் ஜவுளித்துறை, மின்னணுவியல், விண்வெளி தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் வளர்ந்துவரும் தொழில்துறைகள் வரை, தமிழகம் தனித்துவமிக்க கண்டுபிடிப்பு, திறன் மற்றும் தொழில்துறை சிறப்புகளை தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்குகிறது.
தமிழ்நாட்டு மக்கள் தங்கள் பண்பாடு, தனித்துவம் மற்றும் பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொள்கின்றனர். தமிழ் கலாச்சாரம் நம் நாட்டின் நாகரிகப் பயணத்தைப் பல வழிகளில் செழுமையாக்கியுள்ளது.
இந்த நன்னாள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் இன்றும் வரும் காலங்களிலும் மகிழ்ச்சியையும், வெற்றியையும், புதிய வாய்ப்புகளையும் வாரி வழங்கட்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
ஆந்திரப் பிரதேசம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், சத்தீஸ்கர், சண்டிகர், டெல்லி, ஹரியானா, கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளின் நிறுவன தினத்தில் மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.
அவர்களின் வளமான கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் பாரம்பரியங்கள் இந்தியாவின் ஆன்மாவையே வடிவமைத்துள்ளன. அவர்கள் தொடர்ந்து செழித்து, வளம் பெற்று, மேலும் ஒன்றுபட்ட தேசத்திற்குப் பங்களிக்கட்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்படுள்ளது.