தமிழக மீனவர்களை விரைவில் விடுதலை செய்ய வேண்டும்; இலங்கை மந்திரியிடம் ஜெய்சங்கர் வலியுறுத்தல்

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தமிழக மீனவர்களை விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என அந்த நாட்டு மந்திரியிடம் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் வலியுறுத்தி உள்ளார்.
தமிழக மீனவர்களை விரைவில் விடுதலை செய்ய வேண்டும்; இலங்கை மந்திரியிடம் ஜெய்சங்கர் வலியுறுத்தல்
Published on

இலங்கை மந்திரியுடன் பேச்சு

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம், தங்கச்சிமடம், மண்டபம் உள்ளிட்ட தமிழக பகுதிகளை சேர்ந்த சுமார் 60 மீனவர்கள், அங்குள்ள சிறையில் வாடி வருகின்றனர். இவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சேவுடன் நேற்று காணொலி மூலம் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்த பிரச்சினையை பசில் ராஜபக்சேவிடம் ஜெய்சங்கர் எடுத்துரைத்தார்.

அதாவது, தமிழக மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் விரைந்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இலங்கைக்கு கடன்

இதைத்தவிர, பொருளாதார வீழ்ச்சியில் இருக்கும் இலங்கைக்கு கடனுதவி வழங்குவது குறித்தும் இந்த பேச்சுவார்த்தையில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் இந்த சந்திப்பு குறித்து ஜெய்சங்கர் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருந்ததாவது:-

இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சேவுடன் காணொலி காட்சி மூலம் நடந்த சந்திப்பில், இலங்கையின் உறுதியான மற்றும் நம்பகமான கூட்டாளியாக இந்தியா இருக்கும் என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்களுக்காக 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ.7,400 கோடி) கடன் வசதி மற்றும் எரிபொருள் வாங்குவதற்கு 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3,700 கோடி) கடன் வசதியை விரைவில் இந்தியா வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்தியாவின் முதலீடுகள்

சார்க் நாணய மாற்று ஏற்பாட்டின் கீழ் 400 மில்லியன் டாலர்களை இலங்கைக்கு நீட்டிப்பதும், 515.2 மில்லியன் டாலர்களை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைப்பதும் இலங்கைக்கு உதவும்.

பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் இலங்கைக்கு உதவுவதற்கு இந்தியா தனது சர்வதேச கூட்டாளிகளையும் வலியுறுத்தும் என உறுதியளிக்கப்பட்டது.

திரிகோணமலை எண்ணெய் டேங்க் நிறுவன ஒப்பந்தம் மற்றும் அந்த நாட்டில் செயல்படுத்தப்படும் இந்தியாவின் திட்டங்கள், முதலீடுகள் குறித்து இருதரப்பும் மகிழ்ச்சி தெரிவித்தது. இலங்கையில் இந்தியா மேற்கொண்டு வரும் திட்டங்கள் மற்றும் முதலீடுகள் அந்த நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்தும்.

இவ்வாறு ஜெய்சங்கர் குறிப்பிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com