மதுக்கடைகளை மூடும் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு

மதுக்கடைகளை மூடும் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசுமேல்முறையீடு செய்துள்ளது.
மதுக்கடைகளை மூடும் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
Published on

புதுடெல்லி,

மது விற்பனையில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அமல் படுத்தாததால், ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைளை திறப்பதற்கு தமிழகம் முழுவதும் தடை விதித்து நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தேவைப்பட்டால் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வோருக்கு, வீடுகளுக்கே நேரடியாக சென்று விற்பனை செய்யும் (டோர் டெலிவரி) முறையை மேற்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இதனால் 2 நாள் விற்பனைக்கு பிறகு மதுக்கடைகளை தமிழக அரசு இழுத்து மூடியது.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு மாநில வாணிப கழகம் (டாஸ்மாக்) தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் யோகேஷ் கன்னா நேற்று தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டதாவது:-

கடந்த 8-ந் தேதி மதுக்கடைகளை மூடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இது மாநில அரசுகளின் கொள்கை முடிவு சார்ந்த விவகாரம் என்பதால் அந்த மனுவை விசாரிக்க மறுத்து தள்ளுபடி செய்துள்ளது. மேலும் சென்னை ஐகோர்ட்டில் தாக்கலான சில மனுக்கள் இந்த சூழலை பயன்படுத்தி பெருமளவு லாபம் ஈட்டும் வணிக நலன் கொண்டதாக மாநில அரசு நம்புவதற்கான காரணங்கள் உள்ளன.

மதுவிற்பனையை எந்த வழிமுறையில் செய்ய வேண்டும் என்பதை மாநில அரசுகள் தீர்மானிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில் ஐகோர்ட்டின் தற்போதைய உத்தரவு சட்டரீதியாக முகாந்திரம் கொண்டது அல்ல என்பதால் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு இந்த மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக விசாரிக்கவேண்டும் என்று பா.ம.க. வக்கீல் கே.பாலு, மக்கள் நீதி மையம் கட்சியின் அமைப்பு பொதுசெயலாளர் ஏ.ஜி.மவுரியா, மக்கள் அதிகாரம் அமைப்பின் ஜி.ராஜேஷ், மகாலஷ்மி மகளிர் ஆயம் லஷ்மி மணியரசன் ஆகியோரும் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com