“நீதிமன்ற உத்தரவை ஏற்காமல் அராஜகப் போக்கில் தமிழ்நாடு அரசு..” - மத்திய மந்திரி எல்.முருகன்

தமிழ்நாட்டில் அமைதியை குலைக்க மதவாத சக்திகள் செயல்படுவதாக திமுக எம்.பி. டி.ஆர். பாலு தெரிவித்தார்.
“நீதிமன்ற உத்தரவை ஏற்காமல் அராஜகப் போக்கில் தமிழ்நாடு அரசு..” - மத்திய மந்திரி எல்.முருகன்
Published on

புதுடெல்லி,

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டும், 2-வது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது. பேராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர். ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. இதன்படி திமுகவின் மக்களவைக் குழு தலைவர் டி.ஆர். பாலு மற்றும் மாநிலங்களவைக் குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி இருந்தனர்.

இந்த சூழலில் இன்று அவை தொடங்கிய நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். எதிர்க்கட்சியினர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்த நிலையில், சபாநாயகர் அனுமதி அளிக்காததைக் கண்டித்து கடும் அமளி ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து மாநிலங்களவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒத்திவைப்பு நோட்டீசை ஏற்க முடியாது என மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மறுத்ததால், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் மக்களவையில் பேசிய திமுக எம்.பி. டி.ஆர். பாலு, நூறாண்டுகளுக்கு மேலாக தீபம் ஏற்றும் இடத்தில் இந்த ஆண்டும் தீபமேற்றப்பட்டது. 1996, 2017 நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி பாரம்பரிய இடைத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது. தமிழ்நாட்டில் அமைதியை குலைக்க மதவாத சக்திகள் செயல்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். நீதிபதி அவர்களுக்கு சாதமாக தீர்ப்பை வழங்கியிருக்கிறார் என்று கூறினார். டி.ஆர்.பாலுவின் பேச்சுக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய மத்திய இணைமந்திரி எல்.முருகன், நீதிமன்ற உத்தரவை ஏற்காமல் அராஜகப் போக்கில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த போராடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவை தமிழ்நாடு அரசும், காவல்துறையும் மதிக்கவில்லை. மக்களின் வழிபாட்டு உரிமையை தமிழ்நாடு அரசு தடுக்கிறது. ஓட்டு வங்கி அரசியலுக்காக குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை தாஜா செய்ய இவ்வாறு செய்கிறார்கள் என்று கூறினார்.

எல்.முருகனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது இருக்கைக்கு எதிரே சென்று திமுக எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com