திமுக அரசுக்கு விடை கொடுக்க தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது - பிரதமர் மோடி

கோப்புப்படம்
தமிழ்நாடு தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இருக்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன
அந்த வகையில் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் பாமக (அன்புமணி தரப்பு), அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த சூழலில் பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். அவர் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். கேரளாவில் இருந்து மதியம் 1.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி மதியம் 2.15 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் செல்கிறார்.
இந்த நிலையில் திமுக அரசுக்கு விடை கொடுக்க தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் தமிழில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இருக்கிறது! மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ள இருக்கிறேன். ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






