மத்திய அரசு திட்டத்தை பயன்படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம்

மத்திய அரசு திட்டத்தை பயன்படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது.
மத்திய அரசு திட்டத்தை பயன்படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம்
Published on

புதுடெல்லி,

இந்தியாவை 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.350 லட்சம் கோடி) பொருளாதார நாடாக ஆக்க வேண்டும் என்ற முனைப்போடு மத்தியில் அமைந்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பெருக்குவதில் வேலை வாய்ப்புகளை பெருக்குவது முக்கிய பங்கு வகிக்கிறது.

அந்த வகையில், வேலைவாய்ப்புகளை வழங்குகிற தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு நாடு முழுவதும் பி.எம்.ஆர்.பி.ஒய். என்னும் பிரதம மந்திரி ரோஜ்கார் புரொட்சாஹன் யோஜனா என்ற திட்டத்தை அமல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் வேலைக்கு பணியாளர்களை ஒரு நிறுவனம் அமர்த்துகிறபோது, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.) மற்றும் தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றுக்காக நிறுவன அதிபர்கள் செலுத்த வேண்டிய 12 சதவீத சந்தா தொகையை 3 ஆண்டுகளுக்கு மத்திய அரசே செலுத்தி விடும்.

இது கூடுதல் பணியாளர்களை நியமிக்க நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கிறது. இதே போன்று, பணியாளர் களுக்கும் சமூக பாதுகாப்பு கிடைத்து விடுகிறது.

இந்த திட்டத்தினை பயன் படுத்தி நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 31-ந்தேதி நிலவரப்படி, புதிதாக 1 கோடியே 18 லட்சத்து 5 ஆயிரத்து 3 பணியாளர்கள் வேலை வாய்ப்பினை பெற்று உள்ளனர்.

இந்த திட்டத்தை அமல்படுத்தி, பலன் பெற்றதில் நாட்டிலேயே அதிகபட்சமாக 18 சதவீத பங்களிப்புடன் மராட்டிய மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

12 சதவீத பங்களிப்புடன் தமிழ்நாட்டுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக 14 லட்சத்து 17 ஆயிரத்து 808 பேர் வேலை வாய்ப்பினை பெற்று இருக்கிறார்கள்.

மூன்றாவது இடத்தில் கர்நாடகம் (10 சதவீதம்) உள்ளது.

குஜராத் 9 சதவீதம், அரியானா, ஆந்திரா தலா 8 சதவீதம், உத்தரபிரதேசம் 7 சதவீதம், டெல்லி 6 சதவீதம், ராஜஸ்தான் 4 சதவீதம், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் தலா 3 சதவீதம் பங்களிப்பு செய்து இருக்கின்றன.

கேரளா, உத்தரகாண்ட், பஞ்சாப் மாநிலங்கள் தலா 2 சதவீத பங்களிப்பை மட்டுமே செய்து இருக்கின்றன.

ஒடிசா, சத்தீஷ்கார், இமாசல பிரதேசம், பீகார், ஜார்கண்ட், கோவா மாநிலங்கள் தலா 1 சதவீதம் பங்களிப்பு செய்துள்ளன.

நாடு முழுவதும் நிபுணர் சேவைத்துறையில்தான் அதிகபட்சமாக 40 சதவீதம் பேர் புதிதாக வேலை வாய்ப்பினை பெற்றுள்ளனர்.

வர்த்தகம், ஜவுளி, கட்டுமானம் ஆகிய துறைகளில் புதிதாக தலா 7 சதவீதம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com