சென்னை திரும்ப முடியாமல் வாரணாசியில் தவிக்கும் தமிழக வீரர்கள்


சென்னை திரும்ப முடியாமல் வாரணாசியில் தவிக்கும் தமிழக வீரர்கள்
x
தினத்தந்தி 20 Feb 2025 9:30 AM IST (Updated: 20 Feb 2025 9:44 AM IST)
t-max-icont-min-icon

மகா கும்பமேளாவுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

பிரயாக்ராஜ்,

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த மாதம் ஜனவரி 13-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள். இதுவரை 55 கோடிக்கு அதிகமானோர் புனித நீராடியுள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

வருகிற 26-ந்தேதி வரை மகா கும்பமேளா நடைபெறுகிறது. எனவே இன்னும் பலர் புனித நீராட வருவார்கள் என்று எதிர்பார்ப்பதால், 55 கோடி என்ற எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்து ரெயில்களில் ஏறி பயணம் செல்கின்றனர்.

இந்த நிலையில், வாரணாசியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற 6 தமிழ்நாடு வீரர்கள் உள்ளிட்ட 11 மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் சென்னை திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். கும்பமேளாவுக்கு சென்றவர்கள் முன்பதிவு செய்த ரெயில் பெட்டியில் ஏறியதால் ரெயிலில் ஏற முடியாமல் வாரணாசி ரெயில் நிலையத்திலேயே மாற்றுத்திறனாளி வீரர்கள் காத்திருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து தமிழகம் திரும்ப உதவி செய்யுமாறு அணி கேப்டன் சச்சின் சிவா மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தார். கேப்டன் சச்சின் சிவாவின் கோரிக்கையை ஏற்று, வீரர்களை விமானம் மூலம் சென்னை அழைத்து வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலாளர் மேக்நாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story