

புது டெல்லி,
தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதல் கட்டமான, வீட்டுப் பட்டியல், வீட்டு வசதி கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இது தொடர்பாக, மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-
தமிழ்நாட்டில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027-ன் முதல் கட்டமான, வீட்டுப் பட்டியல், வீட்டு வசதி கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த கணக்கெடுப்புக்கான களப்பணிகள் 2026 ஆகஸ்ட் 1 அன்று தொடங்கியது. வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னதாக, 2026 ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை சுய கணக்கெடுப்புக்கான தளம் ஒன்று உருவாக்கப்பட்டது.
இதன்மூலம், குடியிருப்பாளர்கள் தங்களது குடும்ப விவரங்களை அதிகாரப்பூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பு இணையதளம் வழியாக ஆன்லைனில் சமர்ப்பிக்க வழிவகை செய்யப்பட்டது.
நகர்ப்புற, கிராமப்புறங்களில் முழுமையான கணக்கெடுப்பை உறுதி செய்வதற்காக, இந்த பணியில் சுமார் 1.2 லட்சம் வீட்டு பட்டியல் பகுதிகளில் 1.15 லட்சத்திற்கும் அதிகமான கணக்கெடுப்பாளர்களும் 19,000 மேற்பார்வையாளர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த கட்டத்தில், கணக்கெடுப்பாளர்கள் 33 முக்கிய கேள்விகளுக்கு பதில்களை சேகரித்தனர். இவை வீட்டு சொத்துக்கள், குடிநீர், மின்சாரம், சுகாதாரம், சமையலறை வசதிகள், டிஜிட்டல் இணைப்பு போன்ற அத்தியாவசிய குடிமை வசதிகளுக்கான அணுகல் ஆகியவற்றை மதிப்பிடுகின்றன.
வீட்டு பட்டியல், வீட்டுவசதி கணக்கெடுப்பு கட்டத்தை எவ்வித தடங்கலுமின்றி நிறைவு செய்வதை உறுதிசெய்த அனைத்து கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள், நிர்வாக பணியாளர்களின் அர்ப்பணிப்பு, முயற்சிகளுக்கு தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம் தனது பாராட்டுகளை தெரிவிக்கிறது.
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான இந்த முக்கிய தரவு சேகரிப்பு பணிக்காக அளிக்கப்பட்ட விலைமதிப்பற்ற ஆதரவிற்கும், ஒத்துழைப்பிற்கும் மக்கள், மாநில அரசு, முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்கள், மாவட்ட அலுவலர்கள், மாநகராட்சிகள், பொறுப்பு மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்கள், ஊடகத்தினருக்கும் இயக்குநரகம் தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.
1948-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின்படி, இந்த செயல்பாட்டின் போது சேகரிக்கப்படும் அனைத்து தனிநபர் பதில்களும் ரகசியமாக வைக்கப்படுகின்றன. 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டமான மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2027 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நாடு முழுவதும் நடைபெறும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.