அலிகார் பல்கலைக்கழக பேராசிரியர் சங்க தலைவராக தமிழக பேராசிரியை தேர்வு

அலிகார் பல்கலைக்கழக பேராசிரியர் சங்க தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியை எஸ்.சாந்தினிபீ போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார்.
அலிகார் பல்கலைக்கழக பேராசிரியர் சங்க தலைவராக தமிழக பேராசிரியை தேர்வு
Published on

புதுடெல்லி,

நாட்டில் உள்ள பழமையான பல்கலைக்கழகங்களில் உத்தரபிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமும் ஒன்று. இங்கு 47 ஆயிரம் பேர் படிக்கிறார்கள். 1800 பேராசிரியர்கள் பணிபுரிகிறார்கள். 100-க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன.

இங்கு நடைபெற்ற பேராசிரியர் சங்க தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியை எஸ்.சாந்தினிபீ போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக வரலாற்றில் பேராசிரியர் சங்கத்துக்கு தலைவராக ஒரு பெண், அதுவும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட சாந்தினிபீ, தமிழகத்தில் சேலத்தைச் சேர்ந்தவர். அலிகார் பல்கலைக்கழகத்தில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் வரலாற்றுத்துறை பேராசிரியையாக உள்ளார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு அதே சங்கத்தில் செயற்குழு உறுப்பினராகவும், 2015-ம் ஆண்டு கல்விக்குழு உறுப்பினராகவும் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார். அதிலும் முதல் பெண்ணாக சாதித்து இருக்கிறார்.

தலைவர் பதவிக்கு இதுவரை பேராசிரியை யாருமே போட்டியிட்டது இல்லை. இவர் முதல்முறையாக போட்டியிட்டு, போட்டிக்கு ஆளே இல்லாமல் வெற்றி பெற்று இருக்கிறார். வரலாற்றில் ஆய்வுப்பணியையும் தொடர்கிறார். இவர் எழுதிய 'கல்வெட்டுகளில் தேவதாசி' என்ற நூல் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com