மசோதாக்களை தமிழக கவர்னர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி


மசோதாக்களை தமிழக கவர்னர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
x
தினத்தந்தி 8 April 2025 11:10 AM IST (Updated: 8 April 2025 12:27 PM IST)
t-max-icont-min-icon

கவர்னருக்கு என தனிப்பட்ட அதிகாரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் கிடப்பில் போட்டு வருவதாக ஆளும்கட்சியினர் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், மசோதாக்கள், துணைவேந்தர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் கவர்னருக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனு மீது சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

தீர்ப்பின் விவரங்கள் பின்வருமாறு:-

கவர்னர் ஆர்.என்.ரவி அவருக்கான அதிகாரத்தின்படி நடந்து கொள்ளவில்லை. கவர்னருக்கு என தனிப்பட்ட (VETO) அதிகாரம் இல்லை. பொதுவான விதியின் படி, மாநில அரசின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரையின்படியே கவர்னர் செயல்பட முடியும். கவர்னர் தனது விருப்பப்படி செயல்பட முடியாது, அதற்கு அரசியலமைப்பு இடமளிக்கவில்லை.

தமிழக சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை கவர்னர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம். அதை ஜனாதிபதிக்கு அனுப்பியதும் செல்லாது சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீதான கவர்னரின் செயல்பாடு ஏற்புடையதல்ல. ஒப்புதல் வழங்குவது, ஒப்புதலை நிறுத்திவைப்பது உள்ளிட்ட பிரிவுகளை முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும். தமிழ்நாடு கவர்னரின் செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டப்படி வரையறுக்கப்பட்ட நோக்கத்துக்கு எதிரானதாக உள்ளது.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்த முடியாது. அரசியலமைப்பு சாசனம் 200-வது பிரிவின் படிதான் கவர்னர் செயல்பட வேண்டும். அரசியலமைப்பு படியே கவர்னர் செயல்பட வேண்டுமே தவிர அரசியல் சார்போடு செயல்படக்கூடாது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து கவர்னர்கள் ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும். ஒரு வழக்கு தனியாக விசாரிக்கப்படும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கிறோம். சுப்ரீம் கோர்ட்டிற்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142ன் படி சுப்ரீம் கோர்ட்டு அதிரடி அறிவித்துள்ளது. எங்களுக்கு இதை விட்டால் வேறு வழி தெரியவில்லை என குறிப்பிட்டு மசோதாக்களுக்கு உடனடி ஒப்புதல் வழங்கி உள்ளது.

1 More update

Next Story