தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு இன்று வெளியாகாது ?

தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு இன்று வெளியாகாது என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு இன்று வெளியாகாது ?
Published on

சென்னை,

உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம், கடந்த ஆண்டு அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதனால், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பும் கடந்த 2016 செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது. ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறி, தி.மு.க தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. மேலும், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகத் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பாக விசாரிக்கப்பட்டுவந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மே மாதம் 14-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டது. வாக்காளர் பட்டியல் தயாராகவில்லை என்று கூறி, மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இது தொடர்பான வழக்கு கடந்த 4-ம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் 17-ம் தேதிக்கு முன்னதாக நடத்த வேண்டும் என்றும், அதற்கான அறிவிப்பை செப்டம்பர் 18-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. உயர் நீதிமன்றம் அளித்த கெடு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு இன்று வெளியாகாது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் டெல்லியில் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கின் உத்தரவை பெறுத்தே தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com