காஷ்மீரில் சிக்கி தவிக்கும் தமிழக லாரி டிரைவர்கள் - கடும் குளிரில் உணவு கிடைக்காமல் பரிதவிப்பு

பனிப்பொழிவு காரணமாக காஷ்மீரில் தமிழக லாரி டிரைவர்கள் சிக்கி தவிக்கிறார்கள். கடும் குளிரில் உணவு கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.
காஷ்மீரில் சிக்கி தவிக்கும் தமிழக லாரி டிரைவர்கள் - கடும் குளிரில் உணவு கிடைக்காமல் பரிதவிப்பு
Published on

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் ஆப்பிளை வாங்கி விற்பனை செய்வதற்காக, தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட லாரிகள் இம்மாத தொடக்கத்தில் காஷ்மீருக்கு சென்றன. தேவையான ஆப்பிள்கள் வாங்கப்பட்டு, லாரிகளில் ஏற்றப்பட்டன. இதனைத்தொடர்ந்து லாரிகள் அந்தந்த மாநிலங்களுக்கு புறப்பட தயாராக இருந்தன.

இந்தநிலையில் கடும் பனிப்பொழிவு காரணமாக காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதித்தது. குறிப்பாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கடுமையான பனிப்பொழிவு காரணமாக லோகமாண்டா எனும் பகுதியில் லாரிகள் நிறுத்தப்பட்டன. பனிப்பொழிவு ஓயாததால் லாரிகள் இயக்கப்படவில்லை.

இதனால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பனிப்பொழிவில் சிக்கி லாரி டிரைவர்கள் தவித்து வருகின்றனர். கடும் குளிருக்கு ஈடுகொடுக்க முடியாமல் பரிதவிக்கிறார்கள். மேலும் கொண்டு சென்ற உணவு பொருட்கள் தீர்ந்த நிலையில், 4 கி.மீ. தூரம் வரை நடந்து சென்று கிடைக்கும் ரொட்டி துண்டுகள், சப்பாதிகளை சாப்பாட்டு நிலைமையை சரிகட்டி வருகிறார்கள். 25 கி.மீ. தூரம் வரை லாரிகள் அணிவகுத்து நிறுத்தப்பட்டு உள்ளதால் சொந்த ஊருக்கு திரும்ப முடியுமா? என்று கவலையில் உள்ளார்கள்.

இதுகுறித்து காஷ்மீரில் சிக்கி பரிதவித்து வரும் சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த மக்புல்பாஷா கூறியதாவது:-

தொடக்கத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தற்போது பனிப்பொழிவு குறைந்தபோதும் இன்னும் லாரிகள் இயக்க அனுமதி கிடைக்கவில்லை. இதனால் கடும் குளிரில் கஷ்டப்பட்டு வருகிறோம். உணவுக்கு பெரும்பாடு படவேண்டியது உள்ளது. கையிருப்பும் குறைந்து வருவதால், நிலைமையை எப்படி சமாளிப்பது என்று பயமாக இருக்கிறது. எனவே தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து எங்களை மீட்க வேண்டுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com