கர்நாடகா வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: இன்று காலை முதல் நடந்து வந்த போராட்டம் வாபஸ்

வனப்பகுதியில் மானை வேட்டையாடியதாக கூறி 3 பேரை வனத்துறையினர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
கர்நாடகா வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: இன்று காலை முதல் நடந்து வந்த போராட்டம் வாபஸ்
Published on

பெங்களூரு,

கர்நாடகா மாநிலம் ஹனூரில் தமிழர்கள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா சாக்கியா அருகே காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் மரிமங்கலா வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் அடிக்கடி வேட்டைக்காரர்கள் புகுந்து மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி வருகிறார்கள். இதனால் வனப்பகுதியில் ரோந்து பணியை வனத்துறையினர் அதிகரித்துள்ளனர்.

இந்த நிலையில் சாக்கியா வனப்பகுதியில் மர்மநபர்கள் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரி சேகரய்யா தலைமையில் வனக்காவலர்கள் 2 குழுக்களாக பிரிந்து நேற்று அதிகாலை 5 மணி அளவில் ரோந்து சென்றனர்.

துப்பாக்கி சண்டை

அப்போது அடர்ந்த வனப்பகுதியில் 4 பேர் மானை வேட்டையாடி இறைச்சியை பிரித்துக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த வனத்துறையினர், ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரண் அடையும்படி வேட்டைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், அங்கிருந்து தப்பிக்க எண்ணி, தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் வனத்துறையினரை நோக்கி சுட்டதாக தெரிகிறது. இதனை எதிர்பார்க்காத வனத்துறையினர், பதிலுக்கு அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் வனத்துறையினர் மற்றும் அந்த 4 பேருக்கிடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அந்த சமயத்தில் அவர்கள் சுட்டதில் வனக்காவலர் ஒருவர் காயம் அடைந்தார்.

பின்னர் 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அப்போது வனத்துறையினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 3 பேர் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. இதனால் அவர்கள் அங்கேயே சுருண்டு விழுந்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.

3 பேர் பலி

இதையடுத்து வனத்துறையினர், துப்பாக்கி குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்த 3 பேரின் அருகில் சென்று பார்த்தனர். அப்போது துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதுபற்றி வனக்காவலர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். இதையடுத்து வனத்துறையினரின் என்கவுண்ட்டரில் பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காயம் அடைந்த வனக்காவலர் கொள்ளேகால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மான் இறைச்சி, துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

வனத்துறை அலுவலகம் சூறை

இதுகுறித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில், என்கவுண்ட்டரில் சுட் டுக் கொல்லப்பட்ட 3 பேரும் ஹனூர் அருகே தோமியார்பாளையாவை சேர்ந்த அந்தோணி சாமி, பீட்டர் மற்றும் குமார் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் வனத்துறையினர் 3 பேரை என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றதை அறிந்து அவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே சாக்கியா, தோமியார்பாளையா கிராம மக்கள், வனத்துறையினரின் நடவடிக்கைக்கு எதிராக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

பதற்றமான சூழல்

அவர்கள் சாக்கியா பகுதியில் உள்ளது வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை வெளியே எடுத்து போட்டு சூறையாடினர். மேலும் அலுவலகம் முன்பு நின்றிருந்த மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்தினார்கள். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

போலீஸ் நிலையம் முன்பு போராட்டம்

இதற்கிடையே பலியான 3 பேரின் உறவினர்களும், தோமியார்பாளையா மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்களும் ஹனூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்களுக்கு ஆதரவாக விவசாய சங்கத்தினரும் போலீஸ் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர். சுட்டுக் கொன்றவர்களை கைது செய்ய வேண்டும் என்றனர்.

இந்த சம்பவம் குறித்து ஹனூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவாகி உள்ளது. கர்நாடகா வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட 3 பேரும் தமிழர்கள் என்று தெரிய வந்துள்ளது. ஹனூரில் வனப்பகுதியில் 3 பேர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போராட்டம் வாபஸ்

இந்தசூழலில் இன்று காலை முதல் 3 பேரின் உறவினர்களும், கிராம மக்களும் போலீஸ் நிலையம் முன்பு போராட்டம் நடத்தி வந்த நிலையில் தற்போது அது வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய வனத்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை மற்றும் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுத் தரப்பில் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மைசூர் அரசு மருத்துவமனையில் உள்ள மூவரின் சடலங்களையும் பெற்றுக் கொள்ள குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com