கர்நாடகத்தில் கிராமப்புறங்களில் 2 ஆயிரம் சி.பி.எஸ்.இ. மாதிரி பள்ளிகள் - துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்

கர்நாடகத்தில் கிராமப்புறங்களில் 2 ஆயிரம் சி.பி.எஸ்.இ. மாதிரி பள்ளிகள் திறக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் கிராமப்புறங்களில் 2 ஆயிரம் சி.பி.எஸ்.இ. மாதிரி பள்ளிகள் - துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்
Published on

வேலை தேடி வந்தவர்கள்

தனியார் நிறுவனங்களின் கல்வி சார்ந்த சமூக பொறுப்பு மாநாடு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

எனது தொகுதியான கனகபுராவை சேர்ந்த 70 ஆயிரம் பேர் பெங்களூருவில் தங்கியுள்ளனர். ஏனெனில் அவர்கள் கல்விக்காக இங்கு வந்துள்ளனர். அதன் பிறகு வேலை தேடி வந்தவர்களும் உள்ளனர். கிராமப்புறங்களில் இருந்து கல்விக்காக நகரங்களை தேடி வருவதை தடுக்க தனியார் நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து முதல்-மந்திரியுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன்.

கல்விக்கு முன்னுரிமை

தனியார் நிறுவனங்கள் தனித்தனியாக செயல்படுவதை விட கூட்டாக தங்களின் திறனை வெளிப்படுத்த வேண்டும். தனியார் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர். நிதி வெளியில் செல்லக்கூடாது. இங்கேயே அவற்றை பயன்படுத்த வேண்டும். தொடக்க கல்விக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். அதன்பிறகு திறன் மேம்பாடு, சுகாதாரம் போன்ற துறைகளின் மீது கவனம் செலுத்தப்படும்.

கர்நாடகத்தில் 6,600-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. அவற்றில் 2 கிராம பஞ்சாயத்துக்கு ஒன்று என்ற வீதத்தில் அரசு சி.பி.எஸ்.இ. மாதிரி பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். 2 ஏக்கரில் இந்த பள்ளி அமைக்கப்படும். இவ்வாறு 2 ஆயிரம் பள்ளிகளை கிராமப்புறங்களில் திறக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். கிராமப்புறங்களில் நல்ல தரமான கல்வி கிடைத்தால், நகரங்களை நோக்கி வரும் மக்களின் எண்ணிக்கை குறையும்.

பெற்றோரின் எண்ணம்

குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுக்க வேண்டும் என்பது தான் ஒவ்வொரு பெற்றோரின் எண்ணம் ஆகும். கல்வித்துறையின் மேம்பாட்டிற்காக ரூ.40 ஆயிரம் கோடியை அரசு செலவழிக்கிறது. அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த நாங்கள் அதிக அழுத்தம் கொடுக்கிறோம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com