‘இந்தியா-கனடா வர்த்தகத்தை 2030-க்குள் ரூ.4.57 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு’ - பிரதமர் மோடி

உலகப் பொருளாதார ஒழுங்குமுறை தற்போது ஒரு அழுத்தமான சூழலில் உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
‘இந்தியா-கனடா வர்த்தகத்தை 2030-க்குள் ரூ.4.57 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு’ - பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

கனடா நாட்டின் பிரதமர் மார்க் கார்னி 4 நாட்கள் பயணமாக கடந்த 27-ந்தேதி இந்தியா வந்தார். தனி விமானம் மூலம் மராட்டிய மாநிலம் மும்பை வந்த மார்க் கார்னியை அரசு அதிகாரிகள் வரவேற்றனர். அவர் நேற்று முன்தினம் மும்பையில் பல்வேறு தொழிலதிபர்களை சந்தித்தார். இதனை தொடர்ந்து மார்க் கார்னி நேற்று டெல்லி சென்றார்.

இந்நிலையில், மார்க் கார்னி இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், சர்வதேச அரசியல் சூழ்நிலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இதனை தொடர்ந்து இந்தியா, கனடா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்படி, இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க கனடா ஒப்புக்கொண்டுள்ளது. அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும், இரு நாடுகளுக்கு இடையே விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்த பேச்சுவார்த்தையும் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து டெல்லியில் இன்று நடைபெற்ற இந்தியா-கனடா தலைமை நிர்வாக அதிகாரிகள் கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசியதாவது;-

“இந்தியா-கனடா இருதரப்பு வர்த்தகத்தை 20230-ம் ஆண்டுக்குள் 50 பில்லியன் அமெரிக்க டாலர்களாக(சுமார் ரூ.4.57 லட்சம் கோடி) உயர்த்த விரும்புகிறோம். அந்த திசையில் நாங்கள் முன்னேறுகிறோம். எனவே, இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை (CEPA) விரைவில் இறுதி செய்ய முடிவு செய்துள்ளோம்.

உலகப் பொருளாதார ஒழுங்குமுறை தற்போது ஒரு அழுத்தமான சூழலில் உள்ளது. இதுபோன்ற கடினமான காலங்களில் இந்தியா மற்றும் கனடாவின் வணிகத் தலைவர்களுக்கு இடையேயான கருத்து பரிமாற்றங்கள் இருதரப்பு வர்த்தக உறவுக்கான திட்டங்களை உருவாக்க உதவும்.

இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாகும். வலுவான உள்நாட்டு நுகர்வு, பெரிய அளவிலான முதலீடு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவை வளர்ச்சிக்கு உதவுகின்றன.

மேலும், சீர்திருத்தங்கள் மற்றும் வணிகம் செய்வதை எளிதாக்குவதில் நாம் செலுத்திய கவனம் ஆகிய நடவடிக்கைகள் இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவியுள்ளன. 2026-27 பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மத்திய அரசு 130 பில்லியன் அமெரிக்க டாலர்களை(11.9 லட்சம் கோடி) ஒதுக்கியுள்ளது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com