பிரபல ஐடி நிறுவனத்தில் பாலியல் வன்கொடுமை, மத மாற்றம்; பல ஆண்டுகளாக அரங்கேறிய கொடூரம்

பாலியல் வன்கொடுமை சம்பவமும் அரங்கேறிய நிகழ்வு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பிரபல ஐடி நிறுவனத்தில் பாலியல் வன்கொடுமை, மத மாற்றம்; பல ஆண்டுகளாக அரங்கேறிய கொடூரம்
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் நாசிக்கில் பிரபல ஐடி நிறுவனமான டிசிஎஸ் (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) செயல்பட்டு வருகிறது.

இந்த ஐடி நிறுவனத்தில் உயர் பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகள் தங்களுக்கு கீழ் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்தும், மதமாற்றத்தில் ஈடுபட்டதும் தற்போது தெரியவந்துள்ளது. மேலும், பாலியல் வன்கொடுமை சம்பவமும் அரங்கேறிய நிகழ்வு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதன் முழு விவரம்:-

மராட்டிய மாநிலம் நாசிக்கில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் நிறுவனத்தில் 20 வயதான இளம்பெண் பணியாற்றி வந்தார். இந்து மதத்தை சேர்ந்த அந்த இளம்பெண் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றியபோது இஸ்லாமிய மத நடைமுறைகளை பின்பற்றத்தொடங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் அவரை அந்நிறுவனத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என நிறுத்தினர். மேலும், டிசிஎஸ் நிறுவனத்தில் மத மாற்ற முயற்சிகள் நடைபெறுவதாக சந்தேகம் எழுப்பி அந்த இளம் பெண்ணின் குடும்ப உறுப்பினர் நாசிக் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் தீவிரத்தை உணர்ந்த போலீசார், சிறப்பு குழுவை அமைத்தனர். பெண் கான்ஸ்டபில்கள் அடங்கிய அந்த சிறப்பு போலீஸ் குழுவினர் அந்த ஐடி நிறுவனத்தில் தூய்மை பணியாளர்களாகவும், புதிய ஐடி ஊழியர்களாகவும் (பிபிஓ) பணியில் சேர்ந்தனர்.

அந்த நிறுவனத்தில் 147 ஊழியர்கள் கொண்ட குழு (டீம்) குறித்து விசாரணையை தொடங்கினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. நிறுவனத்தின் உயர் பொறுப்புகளில் இருந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சில அதிகாரிகள், தங்களுக்கு கீழ் பணியாற்றும் இந்து மதத்தை சேர்ந்த ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை, பாலியல் அத்துமீறல், கூடுதல் பணிச்சுமை, மத ரீதியிலான அவதூறு கருத்துகளை தெரிவித்தல் உள்பட பல்வேறு செயல்களில் ஈடுபட்டுது தெரியவந்தது.

மேலும், அந்நிறுவனத்தில் பணியாற்று வந்த இந்து மத இளம்பெண்ணை நிறுவன அதிகாரி டெனிஷ் ஷேக் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் கடந்த மாதம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதேவேளை, போலீஸ் சிறப்பு குழுவினர் டிசிஎஸ் அலுவலகத்தில் தூய்மை பணியார்கள் போன்றும், புதிய ஊழியர்கள் போன்றும் நுழைந்து அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, அந்நிறுவனத்தில் டீம் லீடர்கள் (Team Leaders), மனிதவள மேம்பாட்டுத்துறை மேலாளர் (HR Manager) உள்பட 7 உயர் அதிகாரிகள் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இந்த 7 பேரும் நிறுவனத்தில் பணிபுரியும் இந்து மத இளம்பெண்களை குறிவைத்து மத மாற்றத்தில் ஈடுபட வைத்தல், பாலியல் ரீதியில் தொல்லை, உடல் அமைப்பு , உடை குறித்து கிண்டல் செய்தல், மத ரீதியில் கருத்துகளை தெரிவித்தல், இளம்பெண்களின் உடைகளை மாற்றி இஸ்லாமிய ரீதியிலான உடைகளை அணிய வற்புறுத்துதல், நோன்பு இருத்தல், அலுவலகத்தில் மத வழிபாடு செய்தல் உள்பட பல்வேறு செயல்களில் ஈடுபட்டுள்ளனர். 2022ம் ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது தொடர்பாக நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை மேலாளரிடம் புகார் அளித்தும் குற்றச்சாட்டுகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தியுள்ளனர்.

பணி இடத்தில் பாலியல் தொல்லை , மத ரீதியில் துன்புறுத்தல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி நாசிக் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிய டீம் லீடர்கள், மனிதவள மேம்பாட்டுத்துறை மேலாளர் உள்பட 7 பேர் மீது அந்நிறுவனத்தில் பணியாற்றும் 8 இளம்பெண்கள் தற்போது போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல், மதமாற்றம் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் , அந்நிறுவனத்தில் பணியாற்றிய ஆசிப் அன்சாரி, ஷாகிப் ஷேக், ஷாரூக் குரேஷி, ராசா மிமொன், தப்ஹி அட்டர், டெனிஷ் ஷேக், நிடா கான் ஆகிய 7 பேரை கைது செய்துள்ளனர்.

இதில் நிடா கான் மனிதவளத்துறை மேலாளராக செயல்பட்டு வந்தார். பெண் ஆன நிடா கான் மூத்த அதிகாரிகள் மீது பெண் ஊழியர்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எஞ்சியோர் டீம் லீடர்களாகவும், நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளாகவும் செயல்பட்டு வந்தனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் கைது செய்யப்பட்ட 7 பேரையும் சஸ்பெண்ட் செய்து டிசிஎஸ் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com