

புதுடெல்லி,
அமெரிக்க கிரீன்கார்டுக்கு விண்ணப்பிக்கும் திட்டத்தில் இருந்து டி.சி.எஸ். நிறுவனத்தை அமெரிக்கா நீக்கியது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
அமெரிக்காவில் ஒரு நிறுவனம் வெளிநாட்டு பணியாளர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்க நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் திட்டம் (பி.இ.ஆர்.எம்.) மூலம் சான்றிதழ் பெற வேண்டும். அதன் அடிப்படையில் தான், வெளிநாட்டு பணியாளர்களுக்கு பின்னர் 'கிரீன்கார்டு' வழங்கப்படுகிறது.
இதற்கிடையே, டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ, காக்னிசன்ட், மைக்ரோசாப்ட், எச்.சி.எல். கேப்ஜெமினி, அடோப் ஆகிய 8 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை இத்திட்டத்தில் இருந்து இடைநீக்கம் செய்து அமெரிக்க தொழிலாளர்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனால் அந்த நிறுவனங்களில் பணியாற்றும் வெளிநாட்டு பணியாளர்களின் கிரீன்கார்டு நடைமுறை பாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து டாடா குழுமத்தைச் சேர்ந்த டி.சி.எஸ். கருத்து தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த 2 ஆண்டுகளில் அமெரிக்காவில் எங்களது பி.இ.ஆர்.எம். சான்றிதழ் விண்ணப்பங்கள் ஒற்றை இலக்கத்திலேயே உள்ளன. எனவே, பி.இ.ஆர்.எம். திட்டத்தில் இருந்து டி.சி.எஸ்.ஐ நீக்கி இருப்பது. எங்களது பணியாளர் உத்தியையோ, வாடிக்கையாளர்கள் உறவையோ எவ்விதத்திலும் பாதிக்காது.
அமெரிக்க தொழிலாளர்துறையின் உத்தரவுக்கு கட்டுப்படுவோம். நாங்கள் வலுவான வளாக தேர்வு முறை மூலம் அமெரிக்க உள்ளூர் பணியாளர்களையே பணியமர்த்தி வருகிறோம்.
அமெரிக்கா முழுவதும் உள்ள 31 அலுவலகங்கள் மற்றும் வினியோக மையங்களில் உள்ளூர் நபர்களையே நியமித்து வருகிறோம். ஏற்கனவே சொன்னதுபோல், அமெரிக்காவில் அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 15 ஆயிரம் ஊழியர்களை நியமிப்போம். அவர்கள் உள்ளூர் பணியாளர்களாக இருப்பார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தொழில் கூட்டமைப்பான 'நாஸ்காம்' தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அமெரிக்காவின் செயல், ஒரு குறிப்பிட்ட குடியேற்ற நடைமுறையைத்தான் பாதிக்கும். ஆனால், குடியேற்றமும், திறமையான பணியாளர்கள் நகர்வும் வெவ்வேறான விஷயங்கள். இரண்டையும் ஒரே கண்ணாடி வழியாக பார்க்கக்கூடாது.
அமெரிக்காவில் திறமையான பணியாளர்கள் பற்றாக்குறை இருந்தபோது. அதற்கு தீர்வு காண எச்-1பி விசா திட்டம் முக்கிய பங்கு வகித்தது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.