ஆந்திர முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு தேர்வு...கூட்டணி கூட்டத்தில் முடிவு


சந்திரபாபு நாயுடு
x
தினத்தந்தி 11 Jun 2024 10:03 AM GMT (Updated: 11 Jun 2024 10:28 AM GMT)

எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு பெற்றதையடுத்து, ஆந்திர கவர்னர் அப்துல் நசீரை சந்தித்து ஆட்சி அமைக்க சந்திரபாபு நாயுடு உரிமை கோரினார்.

அமராவதி,

ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 135 தொகுதிகளிலும், ஜனசேனா 21 தொகுதிகளிலும், பா.ஜ.க. 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 11 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் படுதோல்வி அடைந்துள்ளது.

இந்நிலையில், ஆந்திர பிரதேச சட்டப்பேரவையின் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தேர்வு செய்யப்பட்டுள்ளார். விஜயவாடாவில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அம்மாநில பா.ஜ.க. தலைவர் டி.புரந்தேஸ்வரி மற்றும் ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா மற்றும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், தேசிய ஜானநாயக கூட்டணி தலைவராக சந்திரபாபு நாயுடுவை எம்.எல்.ஏ.க்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர். இந்த கூட்டத்தில் அம்மாநில பா.ஜ.க. தலைவர் டி.புரந்தேஸ்வரி மற்றும் ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஆந்திர முதல்-மந்திரியாக சந்திரிபாபு நாயுடுவை தேர்வு செய்ய ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் முன்மொழிந்தார்.

இதனை அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஒருமனதாக ஏற்றுக்கொண்ட நிலையில், கவர்னர் அப்துல் நசீரை சந்தித்து ஆட்சி அமைக்க சந்திரபாபு நாயுடு உரிமை கோரினார். அவருடன் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணும் கவர்னரை சந்தித்தார்.

ஆந்திர முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு நாளை பதவியேற்கவுள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story
  • chat