

பெங்களூரு,
கர்நாடக மாநிலம் தும்குர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் அப்துல். இவர் வகுப்பறையில் வைத்து மாணவி ஒருவரிடம் காதலை சொல்வது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வகுப்பறையில் இருந்த மாணவர் ஒருவர் செல்போனில் வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், “இந்த வகுப்பை சேர்ந்த மாணவர்கள் என் மீது காட்டிய அளவுகடந்த அன்பை என்னால் மறுக்கவே முடியாது. உங்கள் வகுப்பில் இருக்கும் ஒரு மாணவியிடம் நான் எனது காதலை சொல்ல விரும்புகிறேன்” என்று கூறுகிறார். தொடர்ந்து, ஆசிரியர் அப்துல், மாணவி ஒருவரின் பெயரை குறிப்பிட்டு, “நான் உன்னை காதலிக்கிறேன்” என்று தனது காதலை வெளிப்படுத்துகிறார்.
ஆனால், சம்பந்தப்பட்ட மாணவி உடனே எழுந்து, “நீங்கள் கல்லூரி முதல்வர் முன்னிலையில் இதை சொல்லுங்கள்” என்று கூறுகிறார். உடனே ஆசிரியர் அப்துல், “நேற்று நீ என்னிடம் உன் காதலை சொல்லவில்லையா?” என்று கேட்டபோது, “நான் எப்போது உங்களிடம் அவ்வாறு சொன்னேன்?” என்று அதிர்ச்சியுடன் கேட்கிறார்.
மாணவி தன்னிடம் காதலை சொன்னதற்கு சி.சி.டி.வி. ஆதாரம் உள்ளதாக அப்துல் கூறியபோது, அதனை காட்டுமாறு மாணவி கேட்கிறார். இதற்கு அப்துல், “நான் நாளை உன்னிடம் பேசுகிறேன்” என்று கூறிவிட்டு வகுப்பறையை விட்டு வெளியேறிவிட்டார். இந்த சம்பவம் குறித்த தகவல் கல்லூரி முழுவதும் பரவிய நிலையில், சில மாணவர்கள் ஆத்திரமடைந்து சம்பந்தப்பட்ட ஆசிரியரை மடக்கிப் பிடித்து அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இது தொடர்பான மற்றொரு வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. அதில், குறிப்பிட்ட அந்த மாணவி, ஆசிரியர் அப்துலை காலணியால் தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது. மேலும், மற்ற மாணவர்களும் அப்துலை சூழ்ந்துகொண்டு அவரை அடித்து உதைத்துள்ளனர். அதோடு விடாமல் அவரை கல்லூரி வளாகம் முழுவதும் மாணவர்கள் துரத்தி துரத்தி அடித்ததாகவும், பின்னர் அவர் தனது காரில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில், ஆசிரியர் அப்துலை பணியிடை நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தொடர்ந்து இது குறித்து துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.