

லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பதக்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் திலீப். அரசு பள்ளி ஆசிரியரான இவர் ஷாலினி (வயது 29) என்ற பெண்ணை கடந்த 10 ஆண்டுகளுக்குமுன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஷாலினி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.
இதனிடையே, ஷாலினிக்கும் அவரது கணவர் திலீப்பிற்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதன் காரணமாக இருவரும் அவ்வப்போது வாக்குவாதம், சண்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், ஆசிரியை ஷாலினி நேற்று தனது வீட்டில் உள்ள குளியறையில் மரமமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று ஷாலினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஷாலினியின் கணவன் திலீப், அவரது சகோதரர்கள் பூபேந்திரா, சந்தீப் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகளை அவரது கணவர் தனது சகோதரர்களுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டதாக ஷாலினியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.