

நாக்பூர்,
மராட்டிய மாநிலம் கோன்டியா மாவட்டத்தில் இயங்கிவரும் ஆதிவாசி ஜூனியர் கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தவர் கேசவ் கோபடே. இவருக்கு 15 வருடங்களாக அரசு சம்பளமோ, உதவியோ வழங்கவில்லை. ஆனாலும் சம்பளம் விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வந்தார். பொருளாதார நெருக்கடியால் அவரது மனைவி 6 வருடங்கள் முன்பே மகனுடன் பிரிந்து சென்றுவிட்டார்.
விரைவில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும், அதன்பின்னர் அரசு மானியமோ, சம்பளமோ கிடைக்காது என்று கருதிய அவர் சுதந்திர தினத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த மாவட்டத்தில் சம்பளம் பெறாமல் வேலை பார்க்கும் மற்ற ஆசிரியர்களிடம் அரசுக்கு எதிராக கோபத்தை தூண்டியுள்ளது.