அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் பணியிடை நீக்கம்


அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் பணியிடை நீக்கம்
x

மாணவியை தனி அறைக்கு அழைத்து சென்ற ஆசிரியர், ஆபாசமாக பேசியதுடன், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் கலபுரகி(மாவட்டம்) தாலுகாவில் ஒரு அரசு உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு பள்ளியில் படித்து வந்த ஒரு மாணவிக்கு, அதே பள்ளியில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதாவது மாணவிக்கு பாடம் சொல்லி கொடுப்பதுபோல் தனி அறைக்கு அழைத்து சென்று ஆபாசமாக பேசியதுடன், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அந்த மாணவி பெற்றோரிடம் கூறினாள். உடனே அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதன்படி கல்வித்துறை துணை இயக்குனர் சூர்யகாந்த் சம்பவம் நடந்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் மூத்த கல்வித்துறை அதிகாரி தலைமையில் தனி குழு அமைத்து, இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி உத்தரவிடப்பட்டிருந்தது.

இதற்கிடையில் சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கும்படி ஆங்கில ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் அவர் நேரில் ஆஜராகவில்லை. மேலும் தலைமறைவானார். இதற்கிடையில் மூத்த கல்வித்துறை அதிகாரி தலைமையிலான குழுவினரின் விசாரணை அறிக்கை கல்வித்துறை அதிகாரியிடம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் ஆசிரியர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.

இந்தநிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து, கல்வித்துறை துணை இயக்குனர் சூர்யகாந்த் உத்தரவிட்டார். அதே நேரம் இதுகுறித்த விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால், போக்சோ வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து இதுவரையில் போலீசில் புகார் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

1 More update

Next Story