உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்ற ஆசிரியை, கள்ளக்காதலனுக்கு தூக்கு தண்டனை


உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்ற ஆசிரியை, கள்ளக்காதலனுக்கு தூக்கு தண்டனை
x
தினத்தந்தி 24 Aug 2025 7:54 AM IST (Updated: 24 Aug 2025 12:34 PM IST)
t-max-icont-min-icon

இம்தியாஸ் ஆசிரியை லட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சொரப் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் இம்தியாஸ். இவர் கலபுரகியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு ஆசிரியையாக பணியாற்றி வந்த லட்சுமி என்ற பெண்ணை காதலித்தார். இவர்களது காதலுக்கு இருகுடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இம்தியாஸ், லட்சுமியை பதிவுத்திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

அதையடுத்து இம்தியாஸ் சொரப் தாலுகா தெலகுந்தா கிராமத்தில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். அதேபோல் லட்சுமியும் பத்ராவதி அருகே அந்தரகங்கே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு பணி இடமாறுதல் பெற்று வந்தார்.

அதையடுத்து இம்தியாஸ், தனது மனைவி லட்சுமி மற்றும் மகனுடன் பத்ராவதி டவுன் ஜன்னாபுரா என்.டி.பி. அலுவலகம் அருகே வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் ஆசிரியை லட்சுமி, தனது வீட்டின் அருகே தன்னுடைய பள்ளிக்கூட தோழன் டிரைவர் கிருஷ்ணமூர்த்தியை சந்தித்தார். அப்போது கிருஷ்ணமூர்த்தியும் அதே பகுதியில் வசித்து வருவதாக தெரிவித்தார்.

அதையடுத்து கிருஷ்ணமூர்த்தியும், லட்சுமியும் அடிக்கடி சந்தித்து பேசினர். இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். குறிப்பாக கணவர் இம்தியாஸ் வீட்டில் இல்லாத நேரத்தில் லட்சுமி, தனது கள்ளக்காதலன் கிருஷ்ணமூர்த்தியை தன்னுடைய வீட்டுக்கே வரவழைத்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

இதை லட்சுமியின் மகன் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுபற்றி அந்த சிறுவன் தனது தந்தை இம்தியாசிடம் கூறினான். அதையடுத்து இம்தியாஸ், தனது மனைவி லட்சுமியை அழைத்து கண்டித்தார். கள்ளக்காதலையும் கைவிட்டு விடும்படி எச்சரித்தார். இந்த விஷயம் குறித்து அறிந்த இம்தியாசின் குடும்பத்தினரும் லட்சுமிக்கு புத்திமதி கூறினர். இருப்பினும் லட்சுமி அதை கேட்கவில்லை. அவர் தனது கள்ளக்காதலை தொடர்ந்து வந்தார்.

கடந்த 2016-ம் ஆண்டு ரம்ஜான் பண்டிகையை யொட்டி இம்தியாஸ் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து தன்னுடைய வீட்டுக்கு சென்று மனைவியையும் அழைத்து வருவதாக கூறிவிட்டு வந்தார். அவர் வீடு திரும்பிய நேரத்தில் வீட்டில் லட்சுமியும், கிருஷ்ணமூர்த்தியும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

அதைப்பார்த்த இம்தியாஸ் அதிர்ச்சி அடைந்தார். அதையடுத்து கிருஷ்ணமூர்த்தி அங்கிருந்து ஓடிவிட்டார். 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ந் தேதி அன்று இரவு இம்தியாசுக்கும், லட்சுமிக்கும் இடையே கள்ளத்தொடர்பு விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமி, தனது கள்ளக்காதலன் கிருஷ்ணமூர்த்தியை செல்போனில் தொடர்பு கொண்டு இம்தியாசை கொலை செய்ய வீட்டுக்கு வரும்படி அழைத்தார்.

அதன்பேரில் கிருஷ்ணமூர்த்தி, தனது நண்பர் சிவராஜ் என்பவருடன் லட்சுமியின் வீட்டுக்கு சென்றார். பின்னர் லட்சுமி, அவரது கள்ளக்காதலன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவருடைய நண்பர் சிவராஜ் ஆகிய 3 பேரும் சேர்ந்து இரும்பு கம்பியால் தாக்கி இம்தியாசை படுகொலை செய்தனர். பின்னர் அவரது உடலை ஆட்டோவில் கொண்டு சென்று பத்ரா கால்வாயில் வீசினர்.

இச்சம்பவம் குறித்து அறிந்த இம்தியாசின் தம்பி இதுபற்றி பத்ராவதி நியூடவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து லட்சுமி, அவரது கள்ளக்காதலன் கிருஷ்ணமூர்த்தி, அவருடைய நண்பர் சிவராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது பத்ராவதி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு கடந்த 9 ஆண்டுகளாக விசாரணை நடந்தது. விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி இந்திரா மயில்சாமி செட்டியார் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

அவர் வழக்கில் குற்றவாளிகளான லட்சுமிக்கும், அவரது கள்ளக்காதலன் கிருஷ்ணமூர்த்திக்கும் மரண தண்டனையும், சாட்சியை அழிக்க உதவிய சிவராஜுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து 3 பேரும் சிவமொக்கா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மரண தண்டனை விதிக்கப்பட்டதால் ஆசிரியை லட்சுமி நீதிபதி முன்பு கதறி அழுதார்.

1 More update

Next Story