

திருவனந்தபுரம்,
கேரளாவில் அரசுஅரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், கட்டணம் பெற்றுக்கொண்டு தனியாக டியூசன் நடத்துவதால் பள்ளிக்கூடங்களில் அவர்கள் சரியாக பாடங்களை சொல்லிக்கொடுப்பதில்லை என்பது தொடர்பாக கேரள குழந்தைகள் உரிமை ஆணையத்திற்கு புகார்கள் வந்தது. இதை தொடர்ந்து, கட்டணம் பெற்றுக்கொண்டு டியூசன் நடத்தும் ஆசிரியர்கள் குறித்தான விபரங்களை சேகரித்து, அவர்கள் மீது எடுக்கப்படும் துறை வாரியான நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க கேரள கல்வித்துறையிடம், குழந்தைகள் உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இதனை தொடர்ந்து கேரள பொது கல்வித்துறை இயக்குனர் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, அரசு மற்றும் தனியார் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தனியாக கட்டணம் பெற்றுக்கொண்டு டியூசன் எடுக்கும் ஆசிரியர்கள் குறித்தான விபரங்களை சேகரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளது. மேலும், இவ்வாறு செயல்படும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.