நேரடி பண பரிமாற்றம் திட்டத்தால் 'பயனாளிகளுக்கு கமிஷன் இன்றி பணம் போய்ச்சேருகிறது' - நிர்மலா சீதாராமன்

நேரடி பண பரிமாற்ற திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு எந்தவித கமிஷனும், இடைத்தரகரும் இன்றி பணம் நேரடியாக போய்ச்சேருகிறது என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
நேரடி பண பரிமாற்றம் திட்டத்தால் 'பயனாளிகளுக்கு கமிஷன் இன்றி பணம் போய்ச்சேருகிறது' - நிர்மலா சீதாராமன்
Published on

நேரடி பணபரிமாற்றம்

மத்திய அரசின் மானியங்கள் இப்போது நேரடி பண பரிமாற்றம் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் வங்கிக்கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதனால் பலன்கள் உரியவர்களுக்கு நேரடியாக போய்ச்சேருகிறது.

இதுவரையில் மத்திய பா.ஜ.க. அரசு ரூ.25 லட்சம் கோடியை நேரடி பண பரிமாற்றம் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமன் பேச்சு

இந்த நேரடி பண பரிமாற்றத்தின் பயன் குறித்து ஆந்திர மாநிலம், விசாகபட்டினத்தில், காந்தி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் என்.டி.ராமாராவ் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகிறபோது, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசின் மானியங்கள் இப்போது நேரடி பண பரிமாற்றம் திட்டத்தின்கீழ் பொதுமக்களின் வங்கிக்கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதனால் கசிவுக்கு (கமிஷன், இடைத்தரகர்கள்) வழியில்லாமல் போகிறது.

தொழில்நுட்பம் உதவி

பிரதமர் மோடி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பண கசிவு செயல்முறையை கட்டுப்படுத்தி உள்ளார். பண கசிவுக்கு வழி இல்லை. இலக்கு வைக்கப்பட்டுள்ள பயனாளிகளுக்கு பணம் போய்ச்சேருகிறது.

தொழில்நுட்பம் மிகப்பெரிய கருவியாக மாறி இருக்கிறது. இதனால் மனித முட்டாள் தனமும், சபலமும் கட்டுபடுத்தப்பட்டுள்ளன.

இன்றைக்கு நாம் பின்பற்றி வருகிற தொழில்நுட்பம், பொதுமக்களுக்கு போய்ச்சேர வேண்டிய பலன்கள் நேரடியாக போய்ச்சேருவதை உறுதி செய்கிறது. இதனால் நல்லாட்சியின் குறிக்கோள் நிறைவேறுகிறது.

புத்திசாலித்தனம் சில அம்சங்களை கொண்டிருக்கும். அதிலும் மக்கள் இடையே புகுந்துகொள்ள தெரிந்திருக்கிறார்கள். ஆனால் இன்று வரை, எந்தவிதமான திருட்டுத்தனமும் செய்துவிடாமல், யார் எதை பெற வேண்டுமோ, அதை அவர்கள் பெற முடிவது உறுதி செய்யப்பட்டுள்ளது. நல்லாட்சி என்பது நோக்கங்களை செயல்படுத்தக்கூடிய கருவிகளை தேடுவதாகும்.

குறைவான பணியாளர்கள், நிறைவான நிர்வாகம் என்பதுதான் அரசின் தாரக மந்திரம் ஆகும். எங்கு தேவைப்படுகிறதோ அங்கு அரசின் இருப்பு போதுமான அளவில் இருக்கிறது.

மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவது நல்லாட்சியில் மிக முக்கியமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com