இளம்பெண் பாலியல் கொடுமையால் உயிரிழப்பு: 12 ஆண்டுகளாக போராடி வரும் தாய் நீதி கேட்டு சோனியா காந்தி வீடு முன்பு தர்ணா

இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக முதல்-மந்திரியிடம் சோனியா காந்தி வலியுறுத்துவார் என அவரது உதவியாளர் உறுதி அளித்தார்.
இளம்பெண் பாலியல் கொடுமையால் உயிரிழப்பு: 12 ஆண்டுகளாக போராடி வரும் தாய் நீதி கேட்டு சோனியா காந்தி வீடு முன்பு தர்ணா
Published on

புதுடெல்லி,

கர்நாடக மாநிலம் தட்சின கன்னட மாவட்டம் தர்மஸ்தலா அருகே உள்ள பங்காலா கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தப்ப கவுடா. இவரது மனைவி குசுமாவதி. இந்த தம்பதியின் மகள் கல்லூரியில் படித்து வந்தார். அவர் கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

இது தொடர்பான வழக்கை முதலில் கர்நாடக போலீசாரும் பின்னர் மாநில சி.ஐ.டி. போலீசாரும் விசாரித்தனர். அதன் பிறகு இந்த வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் குற்றம்சாட்டப்பட்ட நபர் இந்த வழக்கிலிருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்டார்.

கர்நாடகாவில் இப்போது சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தாய் குசுமாவதி டெல்லியில் உள்ள முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீட்டு முன்பு நேற்று முன்தினம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது மகேஷ் ஷெட்டி (கர்நாடகா) மற்றும் யோகிதா பயானா உள்ளிட்ட சமூக ஆர்வலர்களும் உடன் இருந்தனர். இதையடுத்து, சோனியாவின் உதவியாளர் குசுமாவதியை சந்தித்து அவருடைய கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

இதுகுறித்து குசுமாவதி நேற்று கூறும்போது, "சோனியா காந்திக்கு உடல்நிலை சரியில்லாததால், அவருடைய உதவியாளர் ஒருவர் என்னுடைய கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது என் மகள் கொல்லப்பட்ட வழக்கில் நீதி வேண்டும் என அவரிடம் கோரிக்கை வைத்தேன். இதையடுத்து, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக முதல்-மந்திரியிடம் சோனியா காந்தி வலியுறுத்துவார் என அவர் என்னிடம் உறுதி அளித்தார். என்னுடைய கோரிக்கைக்கு செவி சாய்த்த சோனியாவுக்கு நன்றி. எனது மகள் அனுபவித்த கொடுமைக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடிக் கெண்டே இருப்பேன்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com