மைனர்பெண் பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

மைனர்பெண் பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சாம்ராஜ்நகர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
மைனர்பெண் பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
Published on

கொள்ளேகால்:-

மைனர்பெண் பலாத்காரம்

சாம்ராஜ்நகர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 21). இவருக்கும், அவரது உறவினர் ஒருவரின் மகளான மைனர் பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், ரங்கசாமி அந்த மைனர்பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.

ஆனாலும் அந்த மைனர்பெண், இந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மைனர்பெண்ணின் பெற்றோர், இதுபற்றி சாம்ராஜ்நகர் போலீசில் புகார் அளித்தனர்.

20 ஆண்டு சிறை

அதன்பேரில் சாம்ராஜ்நகர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரங்கசாமியை கைது செய்தனர். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கடந்த 2020-ம் ஆண்டு நடந்தது. இந்த வழக்கில் சாம்ராஜ்நகர் போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். இந்த நிலையில், வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி நிஷாராணி நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார்.

அப்போது, ரங்கசாமி மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அரசு சார்பில் பாதிக்கப்பட்ட மைனர்பெண்ணுக்கு நிவாரணமாக ரூ.4 லட்சத்தை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com