2008ம் ஆண்டில் ரூ.1,100 கோடி வெள்ள நிவாரணம்; நிதீஷை தாக்கும் தேஜஸ்வி

கடும் வெள்ள பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள பீகாருக்கு பிரதமர் ரூ.500 கோடி நிவாரண உதவி வழங்கியுள்ளதை ராஷ்டீரிய ஜனதா தள தலைவர்களில் ஒருவரான தேஜஸ்வி விமர்சித்துள்ளார்.
2008ம் ஆண்டில் ரூ.1,100 கோடி வெள்ள நிவாரணம்; நிதீஷை தாக்கும் தேஜஸ்வி
Published on

பாட்னா,

பீகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி பீகாரில் இதுவரை 341 பேர் பலியாகி உள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

பீகாரின் 18 மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளன. சுமார் 1.46 கோடிக்கும் அதிகமான மக்கள் மழைவெள்ளத்தினால் வீடுகளை இழந்துள்ளனர். ஏறக்குறைய 7,000 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 4,00,000 க்கும் அதிகமான மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி அதன்பின் உடனடி நிவாரண நிதியாக ரூ.500 கோடி வழங்கப்படும் என கூறினார்.

இந்நிலையில், ராஷ்டீரிய ஜனதா தள தலைவர்களில் ஒருவர் மற்றும் முன்னாள் துணை முதல் மந்திரியான தேஜஸ்வி யாதவ், பிரதமர் மோடியின் அறிவிப்பு பற்றி டுவிட்டரில் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், பீகார் முதல் மந்திரி நிதீஷ் குமாரை தாக்கி பேசியுள்ளார்.

அவர், பீகாரில் கடும் வெள்ள பாதிப்பு உள்ளது. ஆனால், நிதீஷ் ஜியின் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த பிரதமர் ரூ.500 கோடி அறிவித்துள்ளார். எனினும், கடந்த 2008ம் ஆண்டில் வெள்ள பாதிப்பிற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ரூ.1,100 கோடி வழங்கியது. இதுபற்றி முதல் அமைச்சர் என்ன கூறுகிறார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேபோன்று மற்றொரு டுவிட்டர் செய்தியில், முதல் மந்திரி பாட்னாவில் அளிக்க முன்வந்த மதிய உணவு விருந்தினை ஏற்க பிரதமர் மறுத்து உள்ளார். அனைத்து பழிவாங்கல்களும் மெல்ல அரங்கேறும் என தெரிவித்துள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டில் மோடி மற்றும் பிற மூத்த பாரதீய ஜனதா பிரமுகர்களுக்கு இரவு விருந்து அளிக்க நிதீஷ் முன்வந்த நிலையில் பின்னர் அதனை அவரே ரத்து செய்து விட்டார்.

பீகாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை வான்வழி பார்வையிட்ட பின் முதல் மந்திரியின் இல்லத்தில் மதிய உணவு விருந்தில் மோடி பங்கேற்பது என திட்டமிடப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com