தெலுங்கானா: கிராமங்களில் 900 தெருநாய்கள் படுகொலை; அதிர்ச்சி தகவல்

பஞ்சாயத்து தலைவர் உள்பட 2 பேருக்கு எதிராக போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
ஐதராபாத்,
தெலுங்கானாவில் கிராமவாசிகளுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக, தெருநாய்களை படுகொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில், ஜெக்தியால் மாவட்டத்தில் பெகதபள்ளி கிராமத்தில், கடந்த 22-ந்தேதி விஷ ஊசி போட்டு 300 தெருநாய்கள் கொல்லப்பட்டு உள்ளன.
இதுதொடர்பாக, கிராம தலைவர் மற்றும் கிராம பஞ்சாயத்து செயலாளர் இருவர் மீதும் கொடூர செயலுக்காக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக 2 பேருக்கு எதிராக போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். இதில் பஞ்சாயத்து தலைவர், சிலருக்கு பணம் கொடுத்து தெருநாய்களுக்கு விஷ ஊசி போட செய்துள்ளார் என புகார் தெரிவிக்கின்றது.
இதனால், தெலுங்கானாவில் இதுவரை 900 தெருநாய்கள் கொல்லப்பட்டு உள்ளன என விலங்கு நல உரிமைகளுக்கான ஆர்வலர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளனர்.
இதுபற்றி காவல் ஆய்வாளர் கிரண் கூறும்போது, புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து, 70 முதல் 80 தெருநாய்களின் உடல்கள் வெளியே எடுக்கப்பட்டு உள்ளன. 3, 4 நாட்களுக்கு முன் அவை புதைக்கப்பட்டு இருக்க கூடும் என தெரிகிறது. பிரேத பரிசோதனை அறிக்கைகளின் முடிவில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
கடந்த 19-ந்தேதி யச்சாரம் கிராமத்தில் 100 நாய்களுக்கு விஷ ஊசி போட்டு கொன்றுள்ளனர் என்றும் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவற்றில் 50 நாய்களின் உடல்கள் உடனடியாக கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
ஜனவரி மாத தொடக்கத்தில் ஷியாம்பேட்டை மற்றும் ஆரேபள்ளி கிராமங்களில் 300 தெருநாய்களை படுகொலை செய்த சம்பவத்தில் 2 பஞ்சாயத்து தலைவிகள் மற்றும் அவர்களுடைய கணவர்கள் உள்பட 9 பேருக்கு எதிராக ஹனம்கொண்டா மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதேபோன்று காமரெட்டி மாவட்டத்தில் 200 தெருநாய்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் 5 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் உள்பட 6 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தெலுங்கானாவில், இதுபோன்று தெருநாய்கள் கொல்லப்படுவது கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. தெலுங்கானாவின் சித்திப்பேட்டை மாவட்டம் திகுல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் இறுதியில் 100 தெருநாய்கள் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டன.
இதுதொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் ஒருவர், கிராம தலைவருக்கு எதிராக புகார் அளித்துள்ளார். இதில், ஜனவரி முதல் மார்ச் வரையில் 200 தெருநாய்கள் கொல்லப்பட்டு உள்ளன என புகார் தெரிவிக்கின்றது.
அப்பகுதி போலீசிடம் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், மாவட்ட எஸ்.பி. மற்றும் கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, 2019-ம் ஆண்டு சித்திப்பேட்டை நகரில் 100 நாய்கள் கொல்லப்பட்டன. இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் தேர்தல் வாக்குறுதி கொடுத்ததற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையில், தெலுங்கானாவில் 900 தெருநாய்கள் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டு உள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.






