அசாம் முதல்-மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் - சந்திரசேகர ராவ்

அசாம் முதல்-மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
அசாம் முதல்-மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் - சந்திரசேகர ராவ்
Published on

ஐதராபாத்,

உத்தரகாண்டில் பாஜக வேட்பாளரை ஆதரித்து நேற்று முன் தினம் அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ஹிமந்தா, காங்கிரஸ் மீதும் ராகுல் காந்தி மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசுகையில், பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய சர்ஜிகல் தாக்குதலுக்கு ராகுல் காந்தி ஆதாரம் கேட்கிறார். நீங்கள் ராஜீவ் காந்தியின் மகன் தானா? இல்லையா? என்பதற்கு நாங்கள் எப்போதாவது உங்களிடம் ஆதாரம் கேட்டோமா?.

நமது ராணுவ வீரர்கள் கூறுகிறார்கள் என்றால் அவர்கள் தாக்குதல் நடத்தியிருப்பார்கள். ஆதாரம் கேட்டு கேள்வி எழுப்ப உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது? என்றார். ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் கருத்துக்கள் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஹமந்தா பிஸ்வாவின் கருத்துக்கு தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், பிரதமர் மோடி இதுதான் நீங்கள் கொடுக்கும் மரியாதையா? அல்லது ஒரு எம்.பி.யின் தந்தை அடையாளம் குறித்து கேள்வி கேட்க நமது இந்து மதம் கூறுகிறதா?. இது உங்கள் பாஜக முதல்-மந்திரியால் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதை கேட்ட பின்னர் எனது தலை மிகுந்த கணத்துடனும், எனது கண்கள் கண்ணீருடனும் உள்ளது. இது நாட்டிற்கு நல்லதல்ல. அசாம் முதல்-மந்திரி இவ்வாறு எப்படி பேச முடியும். அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

ராகுல் காந்தி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பிஸ்வா சர்மாவை பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜேபி நட்டா பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com