சந்திரசேகர ராவ் தேசிய கட்சி தொடங்குவது எப்போது? - புதிய தகவல்கள்

தேசிய கட்சி தொடங்குவது பற்றி விஜயதசமி நாளில் சந்திரசேகர ராவ் அறிவிக்கிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஐதராபாத்,

தெலுங்கானாவில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியில் இருக்கிறது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு நாட்கள் நெருங்க நெருங்க அக்கட்சி தேசிய அளவில் கால்பதிக்க விரும்புகிறது.

முதலில், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கட்சியின் ஆண்டு விழாவில், தேசிய அரசியலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த மாதம், கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ், தேசிய அரசியலில் குதிக்க வேண்டும் என்று கட்சியின் மாவட்ட தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.

கடந்த மாதம் 5-ந் தேதி பேசிய சந்திரசேகர ராவ், மத்தியில் 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு பா.ஜனதா அல்லாத கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து, கடந்த மாதம் 12-ந் தேதி சட்டசபையில் பேசிய சந்திரசேகர ராவ், தேசிய கட்சி தொடங்கப் போவதாக முதல் முதலில் அறிவித்தார்.

தேசிய அளவில் கால் பதிக்கும் நோக்கத்திலும், பா.ஜனதாவுக்கு எதிராக புதிய அணி உருவாக்கும் நோக்கத்திலும் சந்திரசேகர ராவ், பிற தலைவர்களை சந்திக்க தொடங்கினார். பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமாரை சந்தித்து பேசினார்.

விஜயதசமி தினத்தில் அறிவிப்பு

இந்தநிலையில், விஜயதசமி தினத்தன்று (புதன்கிழமை) தேசிய கட்சி தொடங்குவது பற்றி சந்திரசேகர ராவ் அறிவிப்பார் என்று தெரிகிறது.

இதுகுறித்து தெலுங்கானா ராஷ்டிர சமிதி வட்டாரங்கள் கூறியதாவது:-

சந்திரசேகர ராவ் தேசிய அரசியலை நோக்கி நகர்ந்து வருகிறார். விஜயதசமி நாளில், தேசிய கட்சிக்கான விவரங்களை அவர் அறிவிப்பார். அதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.

தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் பெயர் மாற்றப்படலாம். ஆனால், தேசிய கட்சியாக உடனடியாக அறிவிக்கப்படாது.

தெலுங்கானாவில் அமலில் உள்ள விவசாயிகள், தலித்துகள் ஆகியோருக்கான நலத்திட்டங்களை ஏன் நாடு முழுவதும் அமல்படுத்தவில்லை என்று தெலுங்கானா ராஷ்டிர சமிதி கேட்கும்.

நலத்திட்டங்களை 'இலவசம்' என்று கொச்சைப்படுத்துவது ஏன் என்றும் கேள்வி விடுக்கும்.

இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com