

ஐதராபாத்
தெலுங்கானா பண்ணையில் 10 ஏக்கரில் ரூ.1.5 கோடி மதிப்பிலான கஞ்சா செடிகளை வளர்த்த தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
தெலுங்கானாவின் நகோல்கொண்டா கிராமத்தில், மராட்டியம் மற்றும் சத்தீஷ்கார் எல்லையையொட்டி ஆசிபாபாத் பகுதியில் ஜெய்னூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பண்ணையில் 10 ஏக்கரில் பருத்தி வயல் ஒன்று அமைந்து உள்ளது. இந்த நிலையில், அதில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு வளர்க்கப்பட்டு வந்துள்ளன.
இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, பாட்னாபூர் சாலையில் வாகன சோதனையின்போது, ஆம்புரே புந்தலிக் (வயது 50) என்பவரிடம் விசாரித்தனர்.
அவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியதில், துண்டு ஒன்றில் 11 கிராம் காய்ந்த கஞ்சா செடி மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன்பின்னர் அவருடைய பண்ணையில் சோதனையிட்டு, அதில் பயிரிடப்பட்டு இருந்த 1,245 கஞ்சா செடிகளை வேருடன் அகற்றினர். அவற்றின் மதிப்பு ரூ.1.50 கோடி என போலீசார் தெரிவித்தனர்.
அவரையும், அவருடைய மகன் ஆம்புரே ரமேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் பருத்தி வயலில் ஊடுபயிராக கஞ்சா செடியை வளர்த்து வந்துள்ளனர். 10 மணிநேரம் போராடி கஞ்சா செடியை அகற்றியுள்ளோம் என போலீசார் தெரிவித்தனர். அவரை கஞ்சா பயிரிட கூறிய நபர் யார்? இதற்கு பின்னணியில் உள்ளவர்கள் உள்பட பல கோணங்களில் போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.