தெலுங்கானா: நாயின் செயலை தட்டிக் கேட்ட இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்

அந்த நாய், ஸ்ரீநாத் அமர்ந்திருந்த ஆட்டோவின் டயர் மீது சிறுநீர் கழித்ததுடன், அவர்களைப் பார்த்து குரைத்தது.
நாய் ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்ததை தட்டிக் கேட்ட விவகாரத்தில் இளைஞர் கொலை.
கோப்புப்படம்
Published on

ஹைதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தில் வளர்ப்பு நாய் ஒன்று ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்ததை தட்டிக் கேட்ட விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில், இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாயின் செயலை தட்டிக் கேட்ட இளைஞர்

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகர், ரங்கநாயக குட்டா பகுதியைச் சேர்ந்தவர் உண்டெட்டி ஸ்ரீநாத் (வயது 23). இவர் கடந்த 13-ந்தேதி இரவு, தனது நண்பரின் ஆட்டோவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான வேமுல மது (வயது 28) என்பவர், தனது வளர்ப்பு நாயை அங்கு அழைத்து வந்தார்.

அந்த நாய், ஸ்ரீநாத் அமர்ந்திருந்த ஆட்டோவின் டயர் மீது சிறுநீர் கழித்ததுடன், அவர்களைப் பார்த்து குரைத்தது. இதனை ஸ்ரீநாத் தட்டிக் கேட்டதால், இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது கைக்கலப்பாக மாறியது.

கொடூரக் கொலை

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த மது, தனது வீட்டிற்குள் சென்று காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வந்து, ஸ்ரீநாத்தை சரமாரியாகக் குத்தினார். இதில் படுகாயமடைந்த ஸ்ரீநாத் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கம்மம் அரசு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

போலீஸ் நடவடிக்கை

இச்சம்பவம் குறித்து கம்மம் த்ரீ டவுன் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். கொலைக்குப் பிறகு தப்பியோடிய முதன்மைக் குற்றவாளி வேமுல மதுவை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு சிறிய விவகாரத்தில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com