

ஐதராபாத்,
நடைபெற்று முடிந்த தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிபெருபான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. தெலுங்கானாவில் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த நடிகர்களில் பலரும் பெரிதான வெற்றியை பெற்றிடவில்லை. இந்தநிலையில், தீவிர அரசியலில் களமிறங்கியவர் பவன் கல்யாண். ஜனசேனா என்ற கட்சியை 2014-இல் துவங்கிய அவர், 2018-ஆம் ஆண்டின் ஆந்திர சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார்.
ஆனால், அந்த தேர்தலில் மொத்த தொகுதியிலும் தோல்வியுற்ற போதிலும், தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகின்றார் பவன் கல்யாண். ஆனால், அவரின் அரசியல் பெரும் விமர்சனங்களை பெற்றன.
ஓபன் வாகனத்தில் தொண்டர்கள் புடைசூழ செல்வது, காரில் இருந்து இறங்கி தொண்டர்களிடம் பேசுவது என தொடர் பப்ளிசிட்டி செய்த வந்தார் பவன் கல்யாண். இந்தநிலையில், தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி, பாஜக உடன் கூட்டணி அமைத்து 8 தொகுதிகளில் போட்டியிட்டது. போட்டியிட்ட 8 தொகுதிகளிலும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி தோல்வியடைந்தது.
கம்மம், கொத்குடெம், வைரா, அஸ்வராப்பேட்டை, குகட்பள்ளி, தந்தூர், கோடாட், நாகர்குர்னூல் ஆகிய தொகுதிகளில் ஜனசேனா போட்டியிட்டது. பவன் கல்யாண் குகட்பள்ளி, தந்தூர் மற்றும் கொத்குடெம் ஆகிய 3 தொகுதிகளில் பிரச்சாரம் செய்த போதிலும், ஜனசேனா கட்சி இந்த தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது.