தெலுங்கானா: தலைமை ஆசிரியையை கொன்று ரூ.4 லட்சம் கொள்ளை - 3 மாணவர்கள் கைது

முன்னாள் மாணவர்கள் மற்றும் தற்போதைய மாணவர்கள் என 3 பேர் சேர்ந்து பணத்திற்காக இந்த கொலையை செய்தது அம்பலமானது.
தலைமை ஆசிரியையை கொன்று ரூ.4 லட்சம் கொள்ளை - 3 மாணவர்கள் கைது
தலைமை ஆசிரியை
Published on

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தில் தனியார் பள்ளி தலைமை ஆசிரியை, மாணவர்களால் சரமாரியாக தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சரமாரி தாக்குதல்

தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், கண்டமலே பள்ளி, ஜே.பி. காலனியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ரூபா ரெட்டி என்பவர் தலைமை ஆசிரியையாக வேலை செய்து வந்தார். கடந்த 11-ந் தேதி ரூபா ரெட்டியை மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக தாக்கி, கொடூரமான முறையில் கொலை செய்தனர். மேலும், கொலைக்கு பிறகு அவரிடம் இருந்த ரூ.4 லட்சம் பணத்தையும் திருடி கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

80 பேரிடம் விசாரணை

இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, சந்தேகத்தின் பேரில் 80 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

மாணவர்கள் துணிகரம்

போலீசாரின் தீவிர விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அந்த தலைமை ஆசிரியை பணியாற்றிய பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் மற்றும் தற்போதைய மாணவர்கள் என 3 பேர் சேர்ந்து பணத்திற்காக இந்த கொலையை செய்தது அம்பலமானது.

3 மாணவர்கள் கைது

இதற்கிடையே, கொலையாளிகள் மூவரும் இப்ராஹிம் பட்டினத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் போலீசார் உடனடியாக இப்ராஹிம் பட்டினம் விரைந்து சென்று, தலைமறைவாக இருந்த 3 மாணவர்களையும் கைது செய்தனர்.

தீவிர விசாரணை

கைதான மாணவர்களிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்களே தலைமை ஆசிரியையை திட்டமிட்டு கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com