தெலுங்கானா: 10 ரூபாய்க்கு குழம்பு தர மறுத்ததால் ஓட்டல் ஊழியர்களுக்கு சரமாரி வெட்டு

சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக இரு ஊழியர்களையும் சரமாரியாக வெட்டிய நபர், அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.
தெலுங்கானா: 10 ரூபாய்க்கு குழம்பு தர மறுத்ததால் ஓட்டல் ஊழியர்களுக்கு சரமாரி வெட்டு
Published on

தெலுங்கானா,

தெலுங்கானா மாநிலத்தின் சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் ஜீவரத்தினம். சனிக்கிழமை இரவு அர்.சி. புரத்திலுள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனக்கு 10 ரூபாய்க்கு குழம்பு கேட்டுள்ளார். ஆனால் அங்கிருந்த ஊழியர்களான உதய் (27) மற்றும் அஜய் (19) ஆகிய சகோதரர்கள், குறைந்தபட்ச விலையே 20 ரூபாய் தான் என்று கூறி குழம்பு தர மறுத்துள்ளனர்.

இதனால் ஊழியர்களிடம் ஜீவரத்தினம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர்களை தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த பிரச்சனை ஒரு வழியாக முடிந்தது என்று நினைத்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக ஜீவரத்தினம் மறுபடியும் கடைக்கு வந்தார்.

ஊழியர்கள் யாரும் வெளியே ஓடிவிடக் கூடாது என்பதற்காக திட்டமிட்டு கடையின் ஷட்டரை மூடிவிட்டு தனது வெறியாட்டத்தை தொடங்கியுள்ளார். அவர் தனது ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த பெரிய வாளை எடுத்து, சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக அந்த இரு ஊழியர்களையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.

உயிருக்கு பயந்து அந்த ஊழியர்கள் கடைக்குள் அங்குமிங்கும் ஓடினர். மூலைகளில் பயந்து பதுங்கிய போதிலும், ஜீவரத்தினம் அவர்களைத் தேடி பிடித்து கொடூரமாக தாக்கியுள்ளார். உடல் முழுவதும் ரத்தம் வழிய, உயிருக்கு போராடிய நிலையில், எங்களை விட்டுவிடுங்கள் என்று அந்த ஊழியர்கள் இரு கைகூப்பி அவரிடம் கெஞ்சியுள்ளனர்.

ஆனாலும், அவர்களை தொடர்ந்து தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார் ஜீவரத்தினம். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அமீன்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஜீவரத்தினத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com